Published : 02 Feb 2024 05:40 AM
Last Updated : 02 Feb 2024 05:40 AM

ஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார். இதுகுறித்து, செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, ஏற்கெனவே, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் பயிற்சி மற்றும் ஆலோசனைகளை சமீபத்தில், காணொலி வாயிலாக வழங்கியுள்ளது. தொடர்ந்து, தற்போது உதவிதேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக உள்ள 250-க்கும் மேற்பட்டவர்கள், மண்டல வாரியாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மதுரை, திருச்சி, கோவை பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்கெனவே பயிற்சி அளிக்கப்பட்டுவிட்டது. அதேபோல், சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையில் 2 பிரிவினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இறுதியாக உள்ள ஒரு பிரிவினருக்கு பிப்.5 முதல் 9-ம் தேதி வரை பயிற்சி அளிக்கப்படும். இதைத்தொடர்ந்து, அடுத்த நிலையில் உள்ளவர்களுக்கு மாவட்டங்களில் அவர்கள் பயிற்சி அளிப்பார்கள்.

அதேபோல், நாடு முழுவதும் உள்ள தேர்தல் தொடர்பான காவல்துறை பொறுப்பு அதிகாரிகளுக்கு டெல்லியில் தேர்தல் ஆணையம் சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், செலவினம் தொடர்பான முக்கியத்துவம் பெற்றதாக உள்ள தமிழகத்தின் சார்பில் நானும், சட்டம் - ஒழுங்கு தொடர்பான முக்கியத்துவம் பெற்றதாக உள்ள மேற்குவங்க மாநிலத்தின் தலைமை தேர்தல் அதிகாரியும், மாநிலங்களில் இருந்து பங்கேற்கும் ஐஜி அல்லது கூடுதல் டிஜிபி நிலையிலான ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க உள்ளோம்.

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் முதல்கட்ட சரிபார்த்தல் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதும், அடுத்த கட்டமாக சரிபார்க்கும் பணிகள் நடைபெறும்.

அதிமுக சார்பில் பரிந்துரை: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில் குறைபாடுகள் இருப்பதாக யாரும் தெரிவிக்கவில்லை. முன்னதாகவே, அதிமுக சார்பில் சில பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இறுதி வாக்காளர் பட்டியல்படி புதிதாக வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றுக்காக விண்ணப்பித்தவர்கள் என 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் விரைவில் பதிவுத் தபாலில் அனுப்பப்படும்.

புதிதாக பெயர் சேர்க்கவும், பெயர் நீக்கப்பட்டிருந்தால் மீண்டும் சேர்க்கவும் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம். தேர்தல் தேதி அறிவிக்கப்படும் பட்சத்தில், வேட்பாளர்கள் இறுதி வேட்புமனுத் தாக்கலுக்கு 10 நாட்கள் முன்பு வரை பெயர் சேர்க்கப்படும். இவ்வாறு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x