Published : 06 Feb 2018 10:02 AM
Last Updated : 06 Feb 2018 10:02 AM
விவசாயிகள் விளைவித்த நெல்லை தனியார் வியாபாரிகள் குறைவான விலை கொடுத்து வாங்குவதால், விவசாயிகள் பாதிக்கப்படுவதை உணர்ந்த தமிழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்தது.
குறுவை பருவத்தில் குறைவான அளவில் மட்டுமே நெல் சாகுபடி நடைபெறும் என்பதால், அப்போது குறைவான அளவில் ஒவ்வொரு வட்டத்துக்கும் ஒரு குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும். சம்பா பருவத்தில் அதிக பரப்பளவில் சாகுபடி நடைபெறும் என்பதால் மாவட்டந்தோறும் நூற்றுக்கணக்கான கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்.
இதற்காக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் முத்தரப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு, அந்தந்த ஆண்டின் கொள்முதல் விலை எவ்வளவு, ஊக்கத் தொகை எவ்வளவு, எத்தனை டன் கொள்முதல் செய்வது என இலக்கு நிர்ணயித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிடுவது வழக்கம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்த முத்தரப்பு கூட்டம் நடத்தப்படுவது இல்லை.
இந்நிலையில் குறுவை, சம்பா அறுவடையின்போது டெல்டா மாவட்டங்களில் அரசின் கொள்முதல் நிலையங்கள் போதிய அளவு திறக்கப்படாததால், தனியார் வியாபாரிகள் குறைந்த விலை வைத்து விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 10 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 74 ஆயிரம் டன் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
நடப்பாண்டு 1 லட்சத்து 14 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதுவரை மாவட்டம் முழுவதும் 80 சதவீதம் நெல் அறுவடை முடிந்துள்ள நிலையில் 229 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக 13,247 டன் நெல் மட்டுமே கடந்த பிப்.3-ம் தேதி வரை கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.
கூடுதல் தொகை வசூல்
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இலக்கை எட்ட முடியாமல் போகும் நிலை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்கு ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சுந்தரவிமலநாதன் கூறியதாவது: விவசாயிகள் நலனுக்காக தொடங்கப்பட்ட கொள்முதல் நிலையங்களில் தற்போது ஊழல் அதிகரித்துள்ளது.
மூட்டைக்கு எடையிழப்பு என்ற பெயரிலும், மூட்டையை கையாளுவதற்கு என்ற பெயரிலும் கூடுதல் தொகையை விவசாயிகளிடம் வசூலிக்கின்றனர்.
கொள்முதல் நிலையத்துக்கு செல்லும் விவசாயிகளை காக்கவைப்பதுடன், பணம் பட்டுவாடா செய்வதிலும் காலதாமதம் செய்வதால் விவசாயிகள் குறைந்த விலை கிடைத்தாலும் பரவாயில்லை எனக் கருதி தனியார் வியாபாரிகளை நாடுகின்றனர். கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளைக் காக்க வைக்கும் நிலையில், தனியார் வியாபாரிகள் களத்து மேட்டுக்கே வந்து கொள்முதல் செய்கின்றனர்.
விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல்லை அதிகாரிகளின் துணையோடு தனியார் வியாபாரிகள் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்கின்றனர். வியாபாரிகளுக்கு உடந்தையாகவே கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. இதனால் கொள்முதல் நிலையங்களின் மீது விவசாயிகள் நம்பிக்கையை இழந்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் கூட்டப்பட வேண்டிய முத்தரப்பு கூட்டமும் நடத்தப்படுவது இல்லை. வேளாண்மைத் துறை, உணவுத் துறை அமைச்சர்கள் வசிக்கும் டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் நிலையங்களை கண்காணிக்காமல் விட்டுவிட்டதால் இலக்கை எட்ட முடியாத நிலை உள்ளது என்றார்.
200 மூட்டைகள் இருந்தால்...
இதுகுறித்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தஞ்சாவூர் மாவட்ட முதுநிலை மண்டல மேலாளர் ஏ.ராஜகோபாலன் கூறியபோது, “தஞ்சாவூர் மாவட்டத்தில் தேவையான இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
விவசாயிகள் பெரும்பாலும் ‘ஏ’ கிரேடு ரக நெல்லை தனியார் வியாபாரிகளிடம் விற்று விடுகின்றனர். பொது ரக நெல்லை மட்டுமே கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வருவதால் இந்தாண்டு கொள்முதல் குறைந்துள்ளது. இருந்தாலும் இலக்கை அடைய முழு வீச்சில் செயல்பட்டு வருகிறோம். 200 மூட்டைகள் இருந்தால் களத்து மேட்டுக்கே சென்று நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் செய்து வருகிறது. இதுவரை 229 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 13,247 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT