Published : 02 Feb 2024 05:52 AM
Last Updated : 02 Feb 2024 05:52 AM
சென்னை: இப்போதைக்கு தனித்துப் போட்டி இல்லை, மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து பாமக போட்டியிடும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை அரங்கில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார். பாமக தலைவர் அன்புமணி, கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, பொருளாளர் திலகபாமா, வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.
24 தீர்மானங்கள்: தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும்.என்.எல்.சி சுரங்கங்கள், சிப்காட் உருவாக்கம் மற்றும் விரிவாக்கத்துக்காக நிலம் கையகப்படுத்த தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட 24 தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.
வரவுள்ள மக்களவைத் தேர்தலில் மாநில நலனிலும், தேசிய நலனிலும் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவும், எந்தெந்தக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கு வழங்குவதாகவும் பொதுக்குழு கூட்டத்தில் அரசியல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதைத்தொடர்ந்து ராமதாஸ் பேசியதாவது: கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டாலும் கூட, குறைந்தது 7 இடங்களில் பாமக வெற்றி பெற்றாக வேண்டும். ஆனால், தனித்து போட்டியிட இப்போது நாம் தயாராக இல்லை.
பாமக அடையாளம் கண்டுள்ள 12 மக்களவைத் தொகுதிகளில் பூத் கமிட்டி அமைக்கப்பட்டுவிட்டது. கூட்டணி இல்லாமல், அப்போதே தனித்து போட்டியிட்டிருந்தால், தமிழகத்தில் இன்று பாமக ஆட்சியில் அமர்ந்திருக்கும். வரும் பேரவை தேர்தலில் இது சாத்தியமாகும். ‘பாரத ரத்னா’ உள்பட எந்த விருதை எனக்கு மத்திய அரசு கொடுத்தாலும், அதை நான் வாங்க மாட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.
பாமக தலைவர் அன்புமணி பேசும்போது, “2026 நம்முடைய ஆண்டு. அதற்கு முன்னோட்டம்தான் 2024 மக்களவைத் தேர்தல். இதில் வெற்றி பெற வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT