Published : 02 Feb 2024 06:03 AM
Last Updated : 02 Feb 2024 06:03 AM

நாடாளுமன்றம் முன்பு திமுக சார்பில் போராட்டம்; தமிழகத்தை புறக்கணிக்கும் ‘இல்லாநிலை' பட்ஜெட்: முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: மத்திய அரசின் பட்ஜெட், தமிழகத்தைப் புறக்கணிக்கும் ‘இல்லாநிலை பட்ஜெட்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாஜக 2-வது முறையாக பதவியேற்று, 10 ஆண்டுகள் ஆட்சி செய்தும், சொல்லிக்கொள்ளும் வகையில் எந்தச் சாதனையையும் செய்யவில்லை. இந்நிலையில், எடை போட்டுப் பார்க்க ஏதுமில்லாத வெற்று அறிக்கையை இடைக்கால பட்ஜெட்டாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்.

கடந்தகால சாதனை அறிக்கையாகவோ, நிகழ்கால பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாகவோ, எதிர்காலப் பயன்களுக்கு உத்தரவாதம் தருவதாகவோ இது இல்லை. ஆட்சிக்காலம் முடியப் போகிறது என்ற அலட்சியம்தான் இந்த அறிக்கையில் தெரிகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால் பல சலுகைகளை, குறிப்பாக பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை குறைப்பு இருக்கும் என மக்கள் எதிர்பார்த்தனர். அவர்களுக்கு ஏமாற்றத்தையே இந்த பட்ஜெட் பரிசளித்துள்ளது.

வருமான உச்சவரம்பில் மாற்றத்தையும் வழங்கவில்லை, எந்தப் பொருளுக்கும் வரி குறைப்பு, சலுகைகள் ஏதுமில்லை. சாதாரண, சாமானிய, ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கான எந்த அறிவிப்பும் இல்லை. நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தது 'இல்லா நிலை' பட்ஜெட்டாக மட்டுமே அமைந் துள்ளது.

இந்திய பொருளாதாரம் வளரவில்லை; பணவீக்கம் குறையவில்லை; வறுமை ஒழியவில்லை; வேலையில்லா திண்டாட்டம் நீங்கவில்லை. ஆனால், இவற்றைசெய்து காட்டிவிட்டதாக பொய்அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கி விட்டதாக தோளைத் தட்டிக் கொள்கிறார்கள்.

ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு: ஜிஎஸ்டி வசூல் அதிகரித்திருப்பதாக அமைச்சர் பெருமைப்படும் நிலையில், மாநிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகை குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. இதனால் இந்தாண்டு தமிழகத்துக்கு ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் ரூ.7.5 லட்சம் கோடி வரியை தொடர்ந்து வசூலித்து வரும் மத்திய அரசு, மாநிலங்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிய பங்கை தொடர்ந்து பறித்து வருகிறது. கூட்டாட்சி தத்துவத்துக்கு முரணாக மத்திய அரசு செயல்படுவது கண்டனத்துக்குரியது.

இந்த பட்ஜெட்டில் தமிழகம் முழுமையாகப் புறக்கணிக்கப்பட் டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டதாக நிதியமைச்சர் கூறியுள்ளார். ஆனால், 2015 பட்ஜெட்டில் அறிவித்து, 2019-ல் பிரதமர் அடிக்கல் நாட்டிய மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நடக்காததற்கு என்ன காரணம். தமிழகத்துக்கு மட்டும் ஏன் இந்தஓரவஞ்சனை? பாஜகவுக்கு தமிழகத்தில் ஓட்டில்லை என்பதுதான் காரணமா?

தமிழகத்தில் ‘மிக்ஜாம்’ புயலால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பு, தென்மாவட்ட பாதிப்புகளைக் கருத்தில்கொண்டு 'தீவிர இயற்கைப் பேரிடர்' ஆக அறிவிக்க வேண்டும் என்று பிரதமரிடம் கேட்டுக் கொண்டேன். அதுகுறித்தும், ரூ.31 ஆயிரம் கோடி நிவாரணத் தொகை குறித்தும் எந்த அறிவிப்பும் இல்லை.

கடந்த மூன்றாண்டு காலமாகசென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்காமல் இருப்பது தமிழக மக்களுக்கு செய்யும் மிகப் பெரிய துரோகம்.

இந்த இடைக்கால பட்ஜெட்டில்,ஏழைகள், மகளிர், இளைஞர்கள் மற்றும் உழவர்கள் ஆகிய 4பிரிவினரை 4 சாதிகளைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிட்டிருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது. சமூகநீதிக்குப் புறம்பானது.

நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பாஜகவுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்று கூறி, பட்ஜெட்டை அரசியல் பேராசை அறிக்கையாக நிதியமைச்சர் ஆக்கியிருக்கிறார். வரும் 2047-ம் ஆண்டுதான் புதிய இந்தியா பிறக்கப் போவதாக நிதியமைச்சர் சொல்லியுள்ளார். இவர்களால் புதிய இந்தியாவை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உருவாக்க முடியாது. புதிய இந்தியாவை ‘இண்டியா' கூட்டணி நிச்சயம் உருவாக்கும்.

இந்த பட்ஜெட்டில் தமிழகம் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவார்கள். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தியடிகள் சிலை முன்கருப்புச் சின்னம் அணிந்து போராட்டமும் நடத்துவார்கள். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x