Published : 02 Feb 2024 06:20 AM
Last Updated : 02 Feb 2024 06:20 AM

பாஜக, ஆளுநர்களை கண்டித்து தமிழகம் முழுவதும் பிப்.8-ல் ஆர்ப்பாட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தகவல்

சென்னை: மத்திய பாஜக அரசு மற்றும் ஆளுநர்களைக் கண்டித்து பிப்.8-ம்தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாகஅவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, தொடர்ந்து மாநில உரிமைகள் மீதான தாக்குதலை நடத்தி வருகிறது. பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்களை வஞ்சிக்கும் வகையில் நிதிப்பகிர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் கூட்டாட்சி கோட்பாட்டுக்கு விரோத மான நடவடிக்கைகளைக் கையாண்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக ஆளுநர்களைப் பயன்படுத்தி, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தர மறுப்பது, மாநிலங்களுக்கு போதிய நிதியை ஒதுக்க மறுப்பது போன்ற வேலைகளில் பாஜக ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக தமிழகம், கேரளம், மேற்குவங்கம், பஞ்சாப், டெல்லி போன்ற மாநிலங்களில் ஆளுநர்களைப் பயன்படுத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை செயல்பட விடாமல் முடக்கி வருகிறது.

இவ்வாறு செயல்படும்பாஜக அரசுக்கு எதிராகவும், கேரள மாநில ஆளுநரைக் கண்டித்தும் பிப்.8-ம் தேதி டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்துக்கு ஆதரவாக நாடு முழுவதும் கண்டன இயக்கங்களை மார்க்சிஸ்ட் கட்சி நடத்த இருக்கிறது.

அதன்படி தமிழகத்தில் மாநில உரிமைகள் பறிப்பு, கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராகச் செயல்படும் மத்திய பாஜக அரசையும், ஆளுநர்களைக் கண்டித்து மாநில முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பிப்.8-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். இந்தஆர்ப்பாட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் மாநில, மாவட்டத் தலைவர்கள், தோழமைக் கட்சியினர் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x