Published : 01 Feb 2024 09:27 PM
Last Updated : 01 Feb 2024 09:27 PM
சென்னை: எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வசதிகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்துதான் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும் என ஜனவரி 24-ம் தேதி போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பேருந்து நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.என். மஞ்சுளா முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், "கோயம்பேட்டில் உள்ள தங்களது இடத்தில் பேருந்துகளை நிறுத்தி வைக்க அனுமதிக்க வேண்டும். மீண்டும் கிளாம்பாக்கத்துக்கு எடுத்துச்செல்லும் போது குறிப்பிட்ட இடங்களில் பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதிக்க வேண்டும். மேலும், மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்கவும் அனுமதி அளிக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், "கோயம்பேட்டில் பேருந்துகளை நிறுத்தி வைக்க அனுமதிக்கப்படும். மற்ற கோரிக்கைகள் குறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருக்கிறது. மேலும், 400 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், உணவகங்கள், இலவச மருந்தகங்கள், பெண்களுக்கான பிரத்யேக வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தூரத்தை தவிர வேறு எந்த அசவுகரியமும் அங்கு இல்லை.
கிளாம்பாக்கத்தில் இருந்து மக்கள் வசதிக்காக, சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையில் சுமூக தீர்வு காண வரும் சனிக்கிழமை பேச்சுவார்த்தை கூட்டம் நடத்த தயாராக இருப்பதாக" தெரிவித்தார்.
இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த விவகாரத்தில் இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி அதன் விவரங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை பிப்ரவரி 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வசதிகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளதற்கு தமிழக அரசை பாராட்ட வேண்டுமென கூறிய நீதிபதி, எந்த திட்டம் வந்தாலும் அதில் குறை இருப்பது தவிர்க்க முடியாதது எனவும் குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT