Published : 01 Feb 2024 05:49 PM
Last Updated : 01 Feb 2024 05:49 PM

“34 ஆண்டுகள் ஆகியும் ஆட்சிக்கு வரமுடியவில்லை” - அன்புமணி ஆதங்கம் @ பாமக சிறப்பு பொதுக்குழு

சென்னையில் பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது | படம்: ம.பிரபு

சென்னை: "திமுக தொடங்கி 18 ஆண்டுகளில் ஆட்சிக்கு வருகிறார்கள். அதிமுக தொடங்கி 5 ஆண்டுகளில் ஆட்சிக்கு வருகிறார்கள்.வருகிறார். ஆனால், பாமக தொடங்கி 34 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் நாம் ஆட்சிக்கு வரமுடியவில்லை. இன்னும் நாம் கூட்டணி என்று பேசிக் கொண்டிருக்கிறோம். இது எப்போது மாறும்?" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

சென்னையில் இன்று பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியது "ஒரு கட்சியினுடைய வெற்றியை எப்படி நிர்ணயம் செய்வது? எப்படி எடை போடுவது? சிறந்த கொள்கை, அதிகமான இளைஞர்களைக் கொண்டது, அதிகமான போராட்டங்களைச் செய்த கட்சி, தொலைநோக்கு திட்டங்கள் அதிகமாக கொண்டு கட்சி என்றால் அது பாமகதான். ஆனால், ஒரு கட்சியினுடைய வெற்றி எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது. அக்கட்சியில் உள்ள எம்.பி. மற்றும் எம்எல்ஏக்களை வைத்துதான் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதற்காகத்தான், நாம் அரசியல் தேர்தலில் வெற்றி பெற வேண்டும்.

மக்கள் மனதில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். ஆனால், ஆட்சியதிகாரம் வந்தால்தான், மக்களும், ஊடகங்களும் அப்போதுதான் முதன்மையான கட்சி என்று கூறுவார்கள். தமிழ்நாட்டில் இரண்டு கட்சிகள் 56 ஆண்டு காலம் ஆட்சி செய்து வருகின்றன. அவர்களை விட அதிக தகுதியும், திறமையும், தொலைநோக்குப் பார்வையும் கொண்ட கட்சி பாமக. கட்சியின் நிறுவனர் ராமதாஸ் 44 ஆண்டு காலமாக, அடித்தள மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். இதுபோன்ற உழைப்பை இந்தியாவில் உள்ள வேறு எந்த தலைவர்களும் செய்தது கிடையாது.

சமீபத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு, மத்திய அரசு விருதுகளை அறிவித்தார்கள். அந்த அறிவிப்பு வந்தபிறகு, எனக்கு மிகப்பெரிய ஒரு வருத்தம் இருந்தது. பாரத ரத்னா, பத்ம விபூஷண், பத்மபூஷண் போன்ற விருதுகளை எல்லாம் வழங்கினார்கள். அதிலும், பாரத ரத்னா இந்தியாவின் முதன்மை விருது அதுதான். அதை சமூக போராளி, மறைந்த பிஹார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு வழங்கினார்கள். தகுதியானவர், நிச்சயமாக அவருக்கு வழங்க வேண்டும்.

ஆனால், எனக்கு பெரிய வருத்தம். 85 வயதில், தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் எவ்வளவோ சாதனைகள் செய்த, பாமக நிறுவனர் ராமதாஸுக்கு அந்த விருதை ஏன் வழங்கவில்லை என்ற ஓர் ஆதங்கமும் வருத்தமும் எனக்கு இருந்தது. அது நியாயமான வருத்தம்தான். கர்பூரி தாக்கூர் பிஹாரின் முன்னாள் முதல்வர், முடித்திருத்தும் சமூகத்தைச் சேர்ந்தவர். பிஹாரில் இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்தவர். அதனால், அவருக்கு கொடுத்துள்ளனர், அதை பாராட்டுகிறோம்.

முதல்வராக இருந்து சாதனைகள் செய்வது பெரிய காரியமே கிடையாது. ஆனால், தனக்கு பதவியும், பொறுப்பும் வேண்டாம். சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ எனது கால்கள் படாது எனக்கூறி, தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் சாதனை செய்வதுதான், அதுதான் உயர்ந்த சாதனை. இந்தியாவிலேயே 6 இடஒதுக்கீடுகளைப் பெற்று தந்தவர் நம்முடைய தலைவர் ராமதாஸ்தான்.

திமுக தொடங்கி 18 ஆண்டுகளில் ஆட்சிக்கு வருகிறார்கள். 1949-ல் கட்சியைத் தொடங்கி, 1967-ல் ஆட்சிக்கு வருகிறார்கள். அதிமுக தொடங்கி 5 ஆண்டுகளில் ஆட்சிக்கு வருகிறார்கள். 72-ல் தொடங்கி, 1977-ல் ஆட்சிக்கு வருகிறார். ஆனால், பாமக தொடங்கி 34 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் நாம் ஆட்சிக்கு வரமுடியவில்லை. இன்னும் நாம் கூட்டணி என்று பேசிக் கொண்டிருக்கிறோம். இது எப்போது மாறும்?. மக்களின் மனநிலை மாறிக் கொண்டிருக்கிறது, அதை அனைவரும் சேர்ந்து கொண்டு வரவேண்டும்" என்று அவர் பேசினார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "விரைவில், நடைபெறவிருக்கின்ற மக்களவைத் தேர்தல் தொடர்பான பாமகவின் நிலைப்பாட்டை அறிவிப்போம். எங்களது பல இலக்குகளில், தமிழகத்தில் பாமக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதும் ஒன்று. அதன் அடிப்படையில், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் அதற்கேற்ப வியூகங்களை நாங்கள் அமைப்போம். அந்த முடிவுகளை விரைவில் நாங்கள் அறிவிப்போம்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x