Published : 01 Feb 2024 05:34 PM
Last Updated : 01 Feb 2024 05:34 PM

வாரிசுப் பணி கேட்டு தேவநேய பாவாணரின் கொள்ளுப் பேத்தி ஓராண்டாக போராட்டம்

மதுரை: தனது தாய் இறந்துவிட்டதால் அவர் பார்த்து வந்த பணியை தனக்கு வழங்குமாறு தேவநேய பாவாணரின் கொள்ளுபேத்தி கடந்த ஓராண்டாக போராடி வருகிறார்.

தமிழ் மொழிக்காக வாழ்ந்து மறைந்த 'மொழி ஞாயிறு' தேவநேய பாவாணர் நினைவு மணி மண்டபம், மதுரை கே.கே.நகரில் 80 அடி சாலையில் உள்ளது. இந்த மணி மண்டபத்தில் தேவநேய பாவணரின் திருவுருவச்சிலை உள்ளது. 2007ம் ஆண்டு இந்த மணிமண்டபத்தை அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். இந்த மண்டபத்தில் பாவாணரின் பேத்தியான ஏ.எம்.டி.பரிபூரணத்தையே பொறுப்பாளராக நியமனம் செய்து, அரசு பணி வழங்கினார். பேத்தியையே மணி மண்டபம் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதால் அரசு பணியாளராக மட்டுமில்லாது அந்த மணி மண்டபத்தை கோவில் போல் உருக்கமாக பராமரித்து வந்தார்.

தன்னுடைய தாத்தாவின் வரலாறு, குடும்ப வரலாறு அறிந்த அவர், தமிழ் மொழிக்கு அவர் ஆற்றிய பெருமைகளை மணிமண்டபத்தை பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளிடம் எடுத்து கூறி வந்தார். கடந்த 2022ம் ஆண்டில் ஏ.எம்.டி.பரிபூரணம் உடல்நலகுறைவால் இறந்துவிட்டார். அதன்பிறகு 7 மாதமாக மணி மண்டபம் பொறுப்பாளர் இல்லாமலே இயங்கி வந்தது. அது சர்ச்சையானதால் அதன்பிறகு ஒரு ஊழியரை போட்டு, தற்போது மணி மண்டபம் பராமரிக்கப்படுகிறது.

இந்நிலையில், பாவணர் பேத்தி ஏ.எம்.டி.பரிபூரணம் இறந்த வாரிசு வேலையை அவரது மகள் மனோசாந்தி (தேவநேய பாவாணரின் கொள்ளுப்பேத்தி) தனக்கு வழங்கும்படி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்திருந்தார். அதைதொடர்ந்து, மனோசாந்தி வாரிசுப் பணியை பரிசிலிக்க அரசு கூறியது. ஆனால், அவரது மனுவை பரிசிலனை செய்து அதிகாரிகள், தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை எனக்கூறப்படுகிறது. அதனால், தற்போது வரை, தனது தாத்தாவின் மணிமண்டபத்தில் தனது தாயை போல் பணிபுரிய முடியாமல் கவலையடைந்துள்ளார்.

இது குறித்து அவர் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ''எனது பூட்டன் மொழி ஞாயிறு தேவநேய பாவாணரின் அர்ப்பணிப்புமிக்க தமிழ் பணியையும், அவரது வரலாற்றையும் மணிமண்டபத்திற்கு வரும் அனைத்து மக்களுக்கு எடுத்துக்கூற பாவாணரின் மரபு வழி பேத்தியான எனக்கு வாரிசு பணி வழங்க விண்ணப்பித்து ஒரு ஆண்டாகிவிட்டது. நான் பி.காம்.சிஏ படித்துள்ளேன்.

துறை சார்ந்த அதிகாகளிடம் கேட்டபோது எனது தாயாரின் பணி முதல்வரால் வழங்கப்ட்டதால் தற்போதும் உங்களுக்கான வாரிசுப் பணியும் முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று அவரது ஒப்புதலின் பேரில்தான் வழங்க முடியும் என்கிறார்கள். அதன் அடிப்படையில் தாங்கள் எனது பூட்டன் தேவநேய பாவாணரின் மணிமண்பத்தில் எனது தாயை போல் சிறப்பாக பணிபுரிய வாய்ப்பு வழங்க கேட்டுக் கொள்கிறேன்'' என்று அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x