Published : 01 Feb 2024 07:42 PM
Last Updated : 01 Feb 2024 07:42 PM
கடந்த 2019-ம் ஆண்டு குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு மாநிலங்களவையில் அதிமுக ஆதரவாக வாக்களிக்காமல் இருந்திருந்தால், அந்தச் சட்டம் நிறைவேறியிருக்காதா? திமுக முன்வைக்கும் குற்றச்சாட்டு உண்மையா? அப்படி என்றால் திடீரென அதிமுக தன் நிலைப்பாட்டை மாற்றியது ஏன்?
கடந்த ஜனவரி 29-ம் தேதி, மேற்கு வங்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர், ‘‘சிஏஏ (குடியுரிமைச்) சட்டத் திருத்தம் இன்னும் ஏழு நாட்களுக்குள், நாடு முழுவதும் செயல்படுத்தப்படும். இது நான் அளிக்கும் உத்தரவாதம்’’ என்றார்.
குடியுரிமை சட்டத் திருத்தத்தில் குறிப்பிட்டுள்ளது என்ன? - 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து, இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர், ஜைனர்கள், பார்சி, கிறிஸ்தவ மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வழிவகை செய்யும் என குடியுரிமை திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதில் முஸ்லிம் மக்கள் பற்றி எந்த விபரமும் இடம்பெறவில்லை. இதனால் சிஏஏவுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு எதிரான செயல்பாட்டில் ஈடுபடுவதாக மத்திய பாஜக அரசு மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், சிஏஏ–வை நடைமுறைப்படுத்துவதாகப் மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் அறிவித்திருப்பது, நாடு முழுவதிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கும் கருத்தால், அதிமுக - திமுக இடையே கருத்து மோதல் வெடித்துள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “இலங்கைத் தமிழர்களுக்கும் இசுலாமியர்களுக்கும் எதிரான குடியுரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்துவதற்கு முழுமுதற்காரணமே, நாடாளுமன்றத்தில் அதிமுக ஆதரித்து வாக்களித்ததுதான். அப்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் தோழமை இயக்கங்களுடன் இணைந்து மிகப் பெரிய அளவில் போராட்டங்களை நடத்தினோம். 2021-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானமே நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் தி.மு.க அரசு ஒருபோதும் அனுமதிக்காது. மதநல்லிணக்கத்துக்கு எதிரான பாஜக அரசின் நாசகாரச் செயல்களையும், அதற்குத் துணைபோகும் அதிமுகவின் நயவஞ்சக நாடகங்களையும் நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலடியாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில், “குடியுரிமை சட்டத்தால் சிறுபான்மையின மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது. குடியுரிமை சட்டத்தால் தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்களுக்கும், இலங்கைத் தமிழர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டால் அதைப் பார்த்துக்கொண்டு அதிமுக சும்மா இருக்காது என்பதை, ஏற்கெனவே எங்களது ஆட்சியின் போது சட்டமன்றத்திலேயே தெரிவித்தோம். ஆனால், மதவாத நாடக எதிர்ப்பு ஒன்றையே அரசியல் மூலதனமாக்கி, சிறுபான்மை மக்களை ஏமாற்றி, ஆட்சியில் இருக்கும்போது பா.ஜ.க-வுடன் கூட்டு, ஆட்சியில் இல்லாத போது எதிர்ப்பு என்று சிறுபான்மையினருக்கு துரோகம் செய்து வருகிறது திமுக. கோவை கலவரத்தை கைகட்டி வேடிக்கை பார்த்து இஸ்லாமியர்களின் முதுகில் குத்திய திமுக-விற்கு, எங்களை நோக்கி கை நீட்ட எந்த அருகதையும் இல்லை” என்றார்.
இப்படியாக திமுக - அதிமுக இடையே ’அறிக்கை போர்’ நடந்துகொண்டிருக்கிறது. உண்மையில், இந்தச் சட்டமசோதா நிறைவேறுவதற்கு காரணம் அதிமுக தானா? அதன் பின்னணி என்ன?
கடந்த 2019-ம் ஆண்டு குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் வேண்டி, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மாநிலங்களவையில் மொத்தமுள்ள எண்ணிக்கை ’245’. இதில் மசோதா நிறைவேற ’123’ வாக்குகள் பெறுவது அவசியம். இந்த நிலையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எடுத்த வாக்கெடுப்பில் ’125’ வாக்குகள் பதிவாகின. இதனால், இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.
மாநிலங்களவைவில் அதிமுக கூட்டணி கட்சியான பாமக உட்பட இடம்பெற்றிருக்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கை ’10’. 2019-ம் ஆண்டில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு அதிமுக - கூட்டணி கட்சிகள் மசோதவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால், ’125’ வாக்குகள் பெற்று மசோதா நிறைவேறியது.
ஒருவேளை அதிமுக தரப்பு, மசோதாவுக்கு எதிராக வாக்களித்திருந்தால், மசோதாவுக்கு ’115’ வாக்குகள் மட்டுமே கிடைத்திருக்கும். இதனால், மசோதா நிறைவேறியிருக்காது. இதனை அடிப்படையாக வைத்துதான் ’அப்போது மசோதாவுக்கு ஆதரவு அளித்துவிட்டு, இப்போது அதிமுக எதிர்ப்பு தெரிவிக்கிறது’ என ஆளும் திமுக குற்றச்சாட்டை முன்வைக்கிறது.
தொடர்ந்து, சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி பாஜக என்னும் கருத்து முன்வைக்கப்படுகிறது. பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்டது. மேலும், பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியதை அழுத்தமாக பதிவுசெய்ய, சிறுபான்மையினரை ஆதரிக்க வேண்டிய கட்டாயம் அதிமுகவுக்கு எழுந்துள்ளது. இதனால், தன் நிலைபாட்டை மாற்றிக்கொண்டு, தற்போது இந்த மசோதாவை அதிமுக எதிர்த்து வருவதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT