Published : 01 Feb 2024 04:16 PM
Last Updated : 01 Feb 2024 04:16 PM

‘தமிழகத்தில் 14% மருத்துவர்கள் பற்றாக்குறையால் புதிய மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்தாகும் அபாயம்’

மதுரை மருத்துவக் கல்லூரி நுழைவு வாயில். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி |

மதுரை: அரசு மருத்துவக் கல்லூரிகளில் 14 சதவீத மருத் துவர்கள் பற்றாக்குறையால் புதிய மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்தாகும் அபாயம் உருவாகி உள்ளது.

கடந்த காலத்தில் தேசிய மருத்துவக் கவுன்சில், தமிழகத்தில் ஆய்வுக்கு வரும்போது மருத்துவக் கல்லூரிகளின் விவரம் முன்கூட்டியே தெரியவரும். அதனால், அதற்கு தகுந்தாற்போல மருத்துவக்கல்லூரி இயக்குநரகம், போதுமான பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், உதவிப்பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்பி இருப்பர். ஆனால், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தேசிய மருத்துவக் கவுன்சில் நிர்வாகம், ஒரே நேரத்தில் எந்த மருத்துவக் கல்லூரிக்கு வேண்டுமென்றாலும் ஆய்வுக்கு செல்வோம் என எச்சரித்துள்ளது. இந்தச் சூழலில் அடுத்த மாதம் முதல் தேசிய மருத்துவக் கவுன்சில் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வு நடத்த உள்ளனர்.

தமிழகத்தில் மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 37 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில், அதிமுக ஆட்சியில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டு தற்போது அவை போதுமான கட்டமைப்புகளுடன் இயங்கத் தொடங்கி விட்டன. ஆனால், அக்கல்லூரிகளில் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்கள் போதுமான அளவு நிரப்பப்படவில்லை. மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட பழைய மருத்துவக் கல்லூரிகளிலும் காலிப் பணியிடங்கள் உள்ளன.

ஆனால், தேசிய மருத்துவக் கவுன்சில் ஆய்வுக்கு வர உள்ள நிலையில் மருத்துவக் கல்லூரிகள், அதனுடன் இணைந்த மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆர்வம் காட்டாமல் மருத்துவர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வருவதற்கான ‘பயோமெட்ரிக்’ வருகைப் பதிவேட்டை நடைமுறைப்படுத்த தீவிரம் காட்டி வருகின்றனர். மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் இந்த நடவடிக்கையால் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் மட்டுமில்லாது, பல பழைய அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்துக்கே சிக்கல் எழுந்துள்ளது.

டாக்டர் செந்தில்

இதுகுறித்து தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாநிலத் தலைவர் டாக்டர் செந்தில் கூறியதாவது: தேசிய மருத்துவக் கவுன்சில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவேட்டை கட்டாயமாக்கி உள்ளது. அதில் குறிப்பிட்டுள்ள விதிமுறைகள் நடைமுறைக்கு ஒத்துவராத வகையில் உள்ளன. பயோ மெட்ரிக் நடைமுறை வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறவில்லை. வங்கிக் கணக்கு உள்ளிட்ட பல்வேறு ரகசிய ஆவணங்கள், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளன.

அதனால், ஆதார் அடிப்படையில் பயோமெட்ரிக் கொண்டு வந்தால், நிதிப் பாதுகாப்பு நடைமுறைகளில் சிக்கல் ஏற்படலாம். ஆதார் அடிப்படையில்லாமல் சாதாரண பயோமெட்ரிக் நடைமுறையை கொண்டு வரலாம் என நீதிமன்றம் மூலம் அணுகுவதற்கு ஏற்பாடுகள் செய்து வருகிறோம்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் போதிய பேராசிரியர்கள் இருக்க மாட்டார்கள் என்றும், பணியாட்களே நியமிக்காமல் கல்லூரிகளை இயக்குவர் எனக் கூறப்படுவதால், அதை தடுக்கவே இந்த பயோ மெட்ரிக் நடைமுறையை கொண்டு வந்துள்ளதாக கூறுகிறார்கள்.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் அப்படி இல்லை. அதனால், ஓர் இடத்தில் தவறு நடந்ததை வைத்து ஒட்டுமொத்த மருத்துவர்களையும் குறை கூறக்கூடாது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவர்கள் பற்றாக்குறையை சமாளித்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். மருத்துவர்கள் சில நேரங்களில் சரியான காரணங்களுடன் 20 நிமிடம் தாமதமாக வரலாம். ஆனால், 5 நிமிடம் தாமதம் என்றாலும் ஆப்சென்ட் என குறிப்பிடுகின்றனர்.

அரசு, நேரக் கட்டுப்பாடுகளை விதிக்கும் நிலையில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பாமல், மருத்துவக்கல்லூரிகள் அங்கீ காரத்தை தக்க வைக்க முடியாது. பயோமெட்ரிக் வருகை பதிவேடு, அரசு மருத்துவக்கல்லூரிகளில் உள்ள பணியிடங்கள் பற்றாக்குறைக்கு தீர்வு காண மருத்துவக் கல்வி இயக்குநரகம் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க நிர்வாகிகளிடம் கலந்தாலோசித்து இந்த குழுவை நியமிக்க வேண்டும்.

தேசிய மருத்துவ கவுன்சில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் தவிர பழைய மருத்துவக் கல்லூரிகளிலும் ஆய்வு செய்யலாம். தமிழகத்தில் தற்போது 18 மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இவற்றில் தற்போது 3,500 மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் அளவில் 800 முதல் 900 பணியிடங்கள் உள்ளன.

நோயாளிகள் வருகைக்கு தகுந்தாற்போல், புதிய மருத்துவக் கல்லூரிகளின் கட்டமைப்பு அடிப்படையில் மருத்துவர்கள் பணி நியமனமும் செய்யப்படவில்லை. இந்த பணியிடங்களை நிரப்பாமல் இருக்கும் நிலையில் தேசிய மருத்துவக் கவுன்சில் ஒரே நேரத்தில் எந்த கல்லூரியில் ஆய்வுக்கு சென்றாலும் சிக்கல் ஏற்படலாம்.

தேசிய மருத்துவக் கவுன்சில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 10 சதவீத மருத்துவப் பேராசிரியர்கள் பற்றாக்குறையை மட்டுமே அனுமதிக்கும். 14 சதவீதம் காலி பணியிடம் இருந்தால் மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து ஆகும். இதனால் அங்கு படிக்கும் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகும். ஆகவே 14 சதவீத பணியிட பற்றாக்குறையை 10 சதவீதத்துக்கு கீழ் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x