Published : 01 Feb 2024 06:23 AM
Last Updated : 01 Feb 2024 06:23 AM
சென்னை: மதுரையில் போலி பாஸ்போர்ட் வழங்கிய விவகாரத்தில் ஐபிஎஸ் அதிகாரி டேவிட்சன் தேவாசிர்வாதத்துக்கு எதிராக எந்த ஆதாரமுமில்லை என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வாராகி என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், “மதுரை மாநகர போலீஸ் ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதம் பதவி வகித்த காலகட்டத்தில் அவருடைய மனைவி நடத்திய டிராவல் ஏஜென்சி மூலமாக 200-க்கும் மேற்பட்டோருக்கு போலி ஆவணங்களின் அடிப்படையில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து க்யூ பிரிவு போலீஸார் 3 மாதங்களில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. ஆனால், போலீஸ் ஆணையருக்கு எதிரான வழக்கு என்பதால் க்யூ பிரிவு போலீஸார் முறையாக விசாரிக்கவில்லை.
எனவே, ஐபிஎஸ் அதிகாரியான டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு எதிராக விசாரணை நடத்தவும், அந்த விசாரணையில் முகாந்திரம் இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, “போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் 41 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒரு காவல் உதவி ஆணையர் உட்பட 5 காவல்துறை அதிகாரிகளும் அடங்குவர். 21 அரசு அதிகாரிகளுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆரம்பக்கட்ட விசாரணையில் டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை” என்றார்.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ப.விஜேந்திரன், “ஐபிஎஸ் அதிகாரியான டேவிட்சன் தேவாசீர்வாதத்தின் மனைவி நடத்திய டிராவல் ஏஜென்சி மூலமாகவே 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு போலியாக பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் விவரங்கள் கேட்டும் இதுவரை எந்த பதிலும் இல்லை” என்றார்.
அதையடுத்து நீதிபதிகள், “இந்த விவகாரத்தில் 5 போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் உரிய தகவல் கிடைக்கவில்லை என்றால் மேல்முறையீடு செய்யலாமே, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை எனும்போது அவருக்கு எதிராக எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்” எனக் கூறி விசாரணையை மார்ச் 4-க்கு தள்ளிவைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT