Published : 01 Feb 2024 06:37 AM
Last Updated : 01 Feb 2024 06:37 AM

பணிநிரந்தரம் செய்ய கோரிக்கை அட்டை அணிந்துப் பணிக்கு வந்த எம்ஆர்பி ஒப்பந்த செவிலியர்கள்

பணிநிரந்தரம் செய்யக்கோரி கோரிக்கை அட்டை அணிந்து சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பணியாற்றிய எம்ஆர்பி ஒப்பந்த செவிலியர்கள்.

சென்னை: பணிநிரந்தரம் கேட்டு எம்ஆர்பி ஒப்பந்த செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து நேற்று பணியாற்றினர். இதன்படி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 6,500 ஒப்பந்த செவிலியர்களும், அவர்களுக்கு ஆதரவாக நிரந்தர செவிலியர்களும் பங்கேற்றனர்.

இதுதொடர்பாக செவிலியர்கள் கூறியதாவது: மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் (எம்ஆர்பி) போட்டித்தேர்வு மூலமாக 2015-ம் ஆண்டில் 8,500 செவிலியர்களும், 2019-ம் ஆண்டில் 3,500 செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் படிப்படியாக ஒப்பந்த முறையில் பணியில் அமர்த்தப்பட்டனர். பணியில் சேரும்போது இரண்டு ஆண்டில் பணிநிரந்தரம் செய்யப்படும் என்று பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.

ஆனால், இதுவரை 5,500 செவிலியர்கள் மட்டுமே நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் 2 ஆண்டுகளை கடந்தும் இன்னும் நிரந்தரம் செய்யப்படவில்லை. தொடர் போராட்டத்தில் ஈடுபட்டாலும் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டதுபோல் எம்ஆர்பி செவிலியர்கள் அனைவரையும் நிரந்தரம் செய்ய வேண்டும். மகப்பேறு விடுப்புக்கான ஊதியத்தை வழங்க வேண்டும். சுகாதாரத் துறையில் ஒப்பந்தமுறை ஒழிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கடந்த 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை அனைத்து செவிலியர்களும் முதல்வர், அமைச்சர், செயலாளருக்கு மனு அனுப்பினோம்.

ஜனவரி 31, பிப்ரவரி 1-ம் தேதி ஆகிய இரு நாட்கள் கோரிக்கைகள் அடங்கி அட்டை அணிந்து பணியாற்றுகிறோம். வரும் 3-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் போராட்ட ஆயத்த மாநாடு நடத்தப்படும். வரும் 11-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் கட்சி தலைவர்களை சந்தித்து கோரிக்கைகளுக்கு ஆதரவு கேட்க இருக்கிறோம். வரும் 21-ம் தேதி சென்னையில் முதல்வரை சந்தித்து கோரிக்கைகளை வழங்க திட்டமிட்டு இருக்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x