Published : 31 Jan 2024 07:01 PM
Last Updated : 31 Jan 2024 07:01 PM
சென்னை: "குடியுரிமை திருத்தச் சட்டத்தால் (சிஏஏ) சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது. மதவாத நாடக எதிர்ப்பு ஒன்றையே அரசியல் மூலதனமாக்கி, சிறுபான்மை மக்களை ஏமாற்றி, ஆட்சியில் இருக்கும்போது பாஜகவுடன் கூட்டு, ஆட்சியில் இல்லாத போது எதிர்ப்பு என்று சிறுபான்மையினருக்கு துரோகம் செய்து வருகிறது திமுக. கோவை கலவரத்தை கைகட்டி வேடிக்கை பார்த்து இஸ்லாமியர்களின் முதுகில் குத்திய திமுகவுக்கு, எங்களை நோக்கி கை நீட்ட எந்த அருகதையும் இல்லை" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் இட்ட பதிவு: “குடியுரிமை திருத்தச் சட்டத்தால் (சிஏஏ) சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது.குடியரிமை திருத்தச் சட்டத்தால் தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டால் எங்கள் அரசு பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என்பதை ஏற்கெனவே எங்களது ஆட்சியின் போது சட்டமன்றத்திலேயே நாங்கள் தெரிவித்தோம்.
ஆனால், மதவாத நாடக எதிர்ப்பு ஒன்றையே அரசியல் மூலதனமாக்கி, சிறுபான்மை மக்களை ஏமாற்றி, ஆட்சியில் இருக்கும்போது பாஜகவுடன் கூட்டு, ஆட்சியில் இல்லாத போது எதிர்ப்பு என்று சிறுபான்மையினருக்கு துரோகம் செய்து வருகிறது திமுக. கோவை கலவரத்தை கைகட்டி வேடிக்கை பார்த்து இஸ்லாமியர்களின் முதுகில் குத்திய திமுகவுக்கு, எங்களை நோக்கி கை நீட்ட எந்த அருகதையும் இல்லை.
சிறுபான்மை மக்களை பாதிக்கும் என்ஐஏ, ஊபா சட்டங்களையெல்லாம் ஆதரித்துவிட்டு, வெறும் அறிக்கைகளிலும். மேடைப் பேச்சுகளிலும் மட்டும் பாஜக எதிர்ப்பைக் காட்டிவிட்டு, மறுபுறம் பொன்னாடை போர்த்தி, சாமரம் வீசி, வரவேற்பு அளித்துவிட்டு, சிறுபான்மை மக்களின் காவலனாக வேஷம் போடும் திமுகவின் நாடகத்தை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதிமுக என்றும் சிறுபான்மையின மக்களின் பக்கம் அரணாக நின்று இன்றும் அடக்குமுறை சட்டங்களை உறுதியாக எதிர்க்கும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, “தமிழகத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் திமுக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. மதநல்லிணக்கத்துக்கு எதிரான பாஜக அரசின் நாசகாரச் செயல்களையும், அதற்குத் துணைபோகும் அதிமுகவின் நயவஞ்சக நாடகங்களையும் நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உறுதியாகச் சொல்கிறேன். தமிழ்நாட்டினுள் சிஏஏ-வை கால்வைக்க விடமாட்டோம்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அதன் விவரம் > “தமிழகத்தில் சிஏஏ-வை கால்வைக்க விடமாட்டோம்” - முதல்வர் ஸ்டாலின் உறுதி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT