Published : 31 Jan 2024 06:10 AM
Last Updated : 31 Jan 2024 06:10 AM

கிளாம்பாக்கத்தில் அமைச்சர் காலில் விழுந்து அழுத பெண்கள்

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பெருங்களத்தூரில் கடை வைத்து வியாபாரம் செய்துவரும் பெண்கள்தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், தங்களுக்கு கிளாம்பாக்கத்தில் கடைகளை ஒதுக்குமாறு அமைச்சரின் காலில் விழுந்து கோரிக்கை விடுத்தனர். படம்: எம்.முத்துகணேஷ்

சென்னை: கோயம்பேட்டிலிருந்து இயக்கப்பட்ட தென் மாவட்ட பேருந்துகளில் 80 சதவீதம் கிளாம்பாக்கத்திலிருந்தும், 20 சதவீதம் பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்தும் நேற்றுமுதல் (ஜன.30) இயங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு 149, 78457 00557, 78457 27920, 78457 40924, 78457 64345ஆகிய எண்களை அணுகலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்றுஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வடசென்னை பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இனி மாதவரம் பேருந்து நிலையத்தைப் பயன்படுத்தி தென் மாவட்டங்களுக்கு செல்லலாம். வடசென்னையில் இருந்து கிளாம்பாக்கம் பகுதிக்கு வருவது கடினமாக இருப்பதாகக் கூறப்பட்டதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு 135 நடை மேடைகள் ஒடுக்கப்பட்டுள்ளன. 77 நடைமேடைகளில் தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்குவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பெருங்களத்தூரில் போக்குவரத்து நெருக்கடி இருந்த பகுதியில்சாலை அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இதே போன்று எந்தெந்த இடங்களில் நெருக்கடிகள் உள்ளதென ஆய்வுசெய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆம்னி பேருந்துகளை நிறுத்துவதற்காக முடிச்சூர் பகுதியில் கட்டிவரும் புதிய பேருந்து நிறுத்தம் மார்ச் மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக அமைச்சர் ஆய்வு மேற்கொண்டபோது, சில பெண்கள் திடீரென அமைச்சர் காலில் விழுந்து அழுததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் கூறும்போது, ``நாங்கள் சுமார் 200 பேர் பெருங்களத்தூர் பகுதியில் கடை வைத்து வியாபாரம் செய்தோம். இப்பொழுது பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டும்தான் வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், நாங்கள் செய்வது அறியாமல் தவிக்கின்றோம்.

எங்களுக்கு இங்கு கடை வழங்க கேட்டபோது, கடை ஒதுக்க மறுத்துவிட்டார்கள். அரசு எங்களுக்கு கடை ஒதுக்க முன் வர வேண்டும்'' எனக் கோரிக்கை விடுத்தனர். அப்போது அமைச்சர், ``உங்கள் கோரிக்கைகளை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வேன்'' என உறுதியளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x