Published : 14 Feb 2018 08:09 PM
Last Updated : 14 Feb 2018 08:09 PM
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர் (62) புதுச்சேரி டீக்கடையில் டீ சாப்பிட்டதுடன், அங்கு டீயை ஆற்றினார். துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி ஆகியோரையும் அவர் மரியாதை நிமித்தமாக சந்தி்த்தார்.
இந்தியாவில் அமெரிக்க தூதராகப் பணியாற்றிய ரிச்சர்டு வர்மாவின் பதவிக் காலம் கடந்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதன்பிறகு ஏழு மாதங்களுக்குப் பிறகு அமெரிக்க அதிபரின் வெளிநாட்டு பொருளாதார விவகாரத் துறை மூத்த அதிகாரியாக பணியாற்றி வந்த கென்னத் ஜஸ்டரை இந்தியாவுக்கான தூதராக அதிபர் டொனால்டு ட்ரம்ப் நியமித்தார். இவர் இந்தியா, அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாக முக்கியப் பங்காற்றியவர்.
முக்கிய தூதரான இவர் கடற்கரை ஒட்டியுள்ள ஹோட்டலில் தங்கினார். வழக்கமாக புதுச்சேரி வரும் தூதர்கள் முதல்வர், ஆளுநரை மட்டும் சந்திப்பது வழக்கம். அதேபோல் புதுச்சேரி வந்த கென்னத் ஜஸ்டர் சற்று வித்தியாசமாக செயல்பட்டார். காலை வேளையிலேயே சாலையில் நடந்து சென்று புதுச்சேரியில் பாரம்பரிய கட்டிடங்களைப் பார்வையிட்டு வியந்தார். கடற்கரை சாலையிலுள்ள காந்தி சிலை, அப்பகுதியிலுள்ள கப்ஸ் கோயில் உட்பட பல பாரம்பரிய புகைப்படங்களை எடுத்துக் கொண்டு விவரங்கள் கேட்டார்.
அவ்வழியே நடந்து பாரதி பூங்காவுக்கு வந்தார். அங்கு குப்பைகளை அள்ளிக்கொண்டிருந்த பெண்களை புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர் நடந்தபடி மணக்குள விநாயகர் கோயிலுக்கு வந்து அங்கு பூக்களை விற்பனை செய்யும் பெண்களை புன்னகைக்கக் கூறி புகைப்படம் எடுத்தார்.
பின்னர் காரில் ஏறி வைசியாள் வீதிக்கு வந்தார். பாரம்பரிய புகழ் பெற்ற இவ்வீதியின் இருபுறமும் மரங்களுடன் அழகாய் இருக்கும். யுனெஸ்கோ விருது பெற்ற இவ்வீதியை பார்த்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு புல்வார் பகுதியிலுள்ள நேர்கோட்டு வீதிகளின் விவரங்களை கேட்டுக்கொண்டார்.
பின்னர் ஹோட்டலுக்கு சென்று விட்டு பாய்லர் டீ சாப்பிட விரும்புவதாக தெரிவித்தார். இதையடுத்து ரயில்வே ஜங்ஷன் எதிரேயுள்ள டீ கடைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். டீக்கடையில் டீ ஆற்றுவதைப் பார்த்தார். பின்னர் டீ மாஸ்டர் ஆற்றியது போல் அவரும் டீ ஆற்ற விரும்புவதாகவும், வெள்ளை சட்டையில் படுமா என்று கேட்டார். சட்டையில் படாது என்று அங்கிருந்தோர் தெரிவித்ததால், தூதரும் டீ ஆற்றினார். பின்னர் டீ குடித்துவிட்டு புறப்பட்டார்.
பின்னர் அவர் கூறுகையில், "எனக்கு நீண்ட நாள் ஆசை. அது நிறைவேறியுள்ளது" என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT