Published : 30 Jan 2024 09:33 PM
Last Updated : 30 Jan 2024 09:33 PM
புதுச்சேரி: புதுச்சேரி பிராந்தியமான ஏனாமில் நீச்சல் குளத்தில் மூழ்கி அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படிக்கும் குழந்தை உயிரிழந்தது. இது தொடர்பான விசாரணைக்கோரி உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் நான்கு பிராந்தியங்கள் உள்ளன. அதில் ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே ஏனாம் பிராந்தியம் உள்ளது. இங்கு அக்ரஹாரம் என்ற பகுதியிலுள்ள அரசு ஆரம்ப பள்ளியில் ஒன்றாம் வகுப்பினை சாய் ரோகித் (7) படித்து வந்தார். அவர் வழக்கமாக வீட்டுக்கு சென்று மதிய உணவு சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு வருவது வழக்கம். மதிய உணவுக்கு சிறுவன் வீட்டுக்கு வராததால் பெற்றோர் பள்ளிக்கு தேடி வந்தனர். அங்கு அவன் காணப்படவில்லை. இதையடுத்து பெற்றோர், ஆசிரியர்கள், உறவினர்கள் பல இடங்களில் தேடினர்.
பள்ளி அருகேயுள்ள பாலயோகி விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல்குளத்தில் அச்சிறுவன் கிடந்தான். உடனடியாக அவனது உடலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஏனாம் போலீஸார் கூறுகையில், மாணவர் தவறி விழுந்து இறந்தாரா அல்லது யாரேனும் தள்ளி விட்டார்களா என்ற கோணத்தில் விசாரித்து வருவதாக தெரிவித்தனர். தகவல் அறிந்தவுடன் ஏனாம் மண்டல அதிகாரி முனுசாமி மருத்துவமனைக்கு சென்று மாணவன் உடலை பார்த்தார். அவர் நீச்சல்குளம், பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்.
இதனிடையே மாணவன் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்திட வலியுறுத்தி மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மண்டல நிர்வாக அதிகாரி அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை சந்தித்த மண்டல அதிகாரி முனுசாமி, “இவ்விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும்” என்று உறுதி தந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT