Last Updated : 30 Jan, 2024 08:40 PM

76  

Published : 30 Jan 2024 08:40 PM
Last Updated : 30 Jan 2024 08:40 PM

‘தமிழக கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்களை அனுமதிக்கக் கூடாது’- பழநி கோயில் வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

மதுரை: ‘கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்களை அனுமதிக்கக் கூடாது. இது தொடர்பாக கோயில் நுழைவாயில், கொடிமரம் மற்றும் முக்கிய இடங்களில் தகவல் பலகை வைக்க வேண்டும்’ என பழநி முருகன் கோயில் வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பழநி மலைக்கோயில் பக்தர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ‘பழநி மலைக் கோயிலில் சில நாட்களுக்கு முன்பு பழநி பேருந்து நிலையம் அருகே பழக்கடை நடத்தி வரும் சாகுல் என்பவர் பர்தா அணிந்தவர்களை அழைத்து வந்து விஞ்ச் வழியாக மலைக்கு செல்ல டிக்கெட் வாங்க வந்தார். பர்தா அணிந்திருந்ததை பார்த்து, அவர்கள் இந்துக்கள் அல்லாதவர்கள் என்பதால் கோயில் ஊழியர் டிக்கெட் வழங்க மறுத்தார். அவருடன் சாகுல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து இந்துக்கள் அல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைய அனுமதியில்லை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. அந்தப் பலகை சில மணி நேரத்தில் அகற்றப்பட்டது.

சில நாட்களுக்கு முன்பு தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் சில இளைஞர்கள் மாமிச உணவு சாப்பிட்டனர். உத்தரப் பிரதேசத்தில் இந்து கோயிலில் தொழுகை நடத்திய இஸ்லாமிய இளைஞர் கைது செய்யப்பட்டார். இந்து கோயில்கள் வழிபாட்டுக்குரிய இடமாகும். இந்துக்களின் உணர்வுகளுடன் சம்பந்தப்பட்டது. மசூதிகளில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. மசூதி அருகே தொழுகை நடைபெறும் நேரமாக இருந்தாலும், இல்விட்டாலும் பேண்ட், வாத்தியம் இசைப்பதில்லை. இந்த முறை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பின்பற்றப்பட வேண்டும். எனவே பழநி கோயில் மற்றும் உப கோயில்களில் இந்து அல்லாதவர்கள் நுழையக் கூடாது என அறிவிப்பு பலகை வைக்க உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, பழநி கோயிலில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழையக்கூடாது என மீண்டும் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இந்த மனு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் அனந்த பத்மநாபன், வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் ஆகியோர் வாதிடுகையில், “பெரும்பாலான அறநிலையத் துறை கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழையக் கூடாது என அறிவிப்பு பலகைகள் இருக்கின்றன. ஆனால், சிலர் ஊடக வெளிச்சம் பெறும் நோக்கத்திலும், கோயில் வளாகத்திற்குள் நுழைந்து பிரச்சினை செய்கின்றனர்.

பழநி கோயிலுக்கு பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர். பழநி கோயில் சுற்றுலா தலம் அல்ல. இந்துக்களின் புனித இடமாகும். இங்கு இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைய அனுமதிக்கக் கூடாது” என்றனர்.

கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் வாதிடுகையில், “முருகனை இந்துக்கள் மட்டும் வழிபடுவதில்லை. முருகன் மீது நம்பிக்கை வைத்து பிற மதத்தினரை பின்பற்றுபவர்களும் கோயிலுக்கு வருகின்றனர். அரசியலமைப்பு சட்டப்பிரிவு 25 முதல் 28-ல் இந்திய குடிமகன்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை பாதுகாப்பது மதச்சார்பற்ற அரசு மற்றும் கோயில் நிர்வாகத்தின் கடமை. கோயில் நுழைவு அனுமதி சட்டத்தில், கோயில் என்றால் கருவறை எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அங்குதான் இந்துக்கள் அல்லாதவர்களை அனுமதிக்கக் கூடாது. விஞ்ச் நிலையம், ரோப் கார் நிலையங்கள் கோயில் வளாகத்திற்கு வெளியே உள்ளன. இங்கு அறிவிப்பு பலகை வைப்பதால் எந்த பலனும் ஏற்படாது. இந்து மதத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் தமிழகத்தில் எந்தக் கோயில்களுக்கும் சென்று அந்தந்த கோயில்களின் மரபுகளை பின்பற்றி தரிசனம் செய்யலாம். கொடிமரம் வரை கோயில் வளாகத்தில் யாரும் நுழைவதை தடுக்க முடியாது.

தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்கள் செல்கின்றனர். மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலில் ரூ.50 கட்டணம் செலுத்தி வெளிநாட்டினர் செல்கின்றனர். அவர்கள் கொடி மரம் வரை அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நடைமுறை பிற கோயில்களிலும் உள்ளது. கோயிலில் முக்கியத்துவம் அறியும் வகையில் சுற்றுலா வரும் வெளிநாட்டினர் உட்பட அனைவரும் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழையக் கூடாது என அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும்” என்றார்.

இதேபோல், சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவர் டி.ஆர்.ரமேஷ் சார்பில், இந்துக்கள் அல்லாதவர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் நீதிபதி எஸ்.ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவு: ‘கோயில் நுழைவு அனுமதி சட்டம், அறநிலையத் துறை சட்டத்தில் இந்து கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைய அனுமதியில்லை என தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. கோயில்களில் பட்டியலில் துணை கோயில்கள், மண்டபங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளுக்கு செல்ல இந்துக்கள் மட்டுமே உரிமைப்பட்டவர்கள். கோயில் நுழைவு அனுமதிச் சட்டம், இந்துக்களை மட்டும் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும், இந்துக்கள் அல்லாதவர்களை அனுமதிக்க வேண்டாம் என்பது. இதனால் கோயில் நுழைவு அனுமதிச் சட்டம் மற்றும் அறநிலையத் துறை சட்டத்தை அதிகாரிகள் தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.

இந்து கடவுள்கள், இந்து மதம், விழாக்களில் சம்பந்தப்படாதவர்களை இந்துக்களின் வழிபாட்டு தலங்களில் அனுமதிக்கக் கூடாது. கிறிஸ்தவ ஆலயத்தில் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள், மசூதிகளில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 15-ஐ மீறுவதாகது. மாறாக இந்தக் கட்டுப்பாடுகள் பல்வேறு மதங்களுக்கு இடையிலான மதநல்லிணக்கத்தையும், சமூகத்தில் அமைதியையும் நிலை நாட்டும்.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 13, 15 குறிப்பாக 15(1)-ல் கூறப்பட்டுள்ள மற்ற மதத்தினரின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதில் கோயில் சேர்க்கப்படவில்லை. கோயில் சேர்க்கப்படாத நிலையில் கோயில்களை சுற்றுலா தலமாக கருத முடியாது. இந்து கடவுள், இந்து மதத்தின் மீது நம்பிக்கை வைத்து வருபவர்களை கோயிலுக்கு அனுமதிக்கலாம் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்து கடவுள், மதம் மீது நம்பிக்கை வைத்துள்ள பிற மதத்தினரை எப்படி அடையாளம் கண்டுபிடிப்பது? இந்து அல்லாதவர்களின் உணர்வுகள் குறித்து கவலைப்படும் அதிகாரிகள், இந்துக்களின் நம்பிக்கை குறித்து கவலைப்படுவதில்லை. இந்து மதம், இந்து கோயில்களின் பழக்க, வழக்கம், பாரம்பரியத்தை பாதுகாக்கவே அறநிலையத் துறை கொண்டுவரப்பட்டது. ஆனால், இந்துக்களின் மத உணர்வுகளை பாதுகாப்பதில் அதிகாரிகள் தோல்வி அடைந்துள்ளனர்.

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 25 முதல் 28 வரை ஒவ்வொரும் தங்களின் மதத்தை பின்பற்ற உரிமை வழங்கப்பட்டுள்ளது. பிறர் மத நம்பிக்கைகளில் இடையூறு ஏற்படுத்தக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. பாரத தேசத்தில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், பிற மதத்தினர் இடையிலான மதநல்லிணக்கம் எப்போதும் பாதுகாக்கப்படுகிறது. தஞ்சை கோயில் உள்பட பல்வேறு கோயில்களில் நடைபெற்ற சம்பவங்கள் அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளில் தலையிடுவதாகும். இந்துக்கள் தங்களின் மதத்தை சுதந்திரமாக பின்பற்றவும் உரிமை உண்டு. இந்து கோயில்களில் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் பாதுகாக்க வேண்டும். ஆனால், அறநிலையத் துறை அதிகாரிகள் அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதில் தவறிவிட்டனர்.

பழநி மலைப்பகுதி முழுவதும் இந்துக்களின் புனித இடமாகும். இந்துக்கள் அல்லாதவர்களை மலையேற அனுமதித்து மலையேறிய பிறகு அவர்கள் இந்துக்கள் அல்லாதவர்கள் என தெரியவந்து தடுக்கப்பட்டால் அவர்கள் விரக்தி அடைவர். ஏன் முன்கூட்டியே சொல்வதில்லையா என கேள்வி எழுப்புவர். இதுபோன்ற நிலைய தவிர்க்க ரோப் கார் நிலையம், விஞ்ச் நிலையம் என அனைத்து இடங்களில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழையக் கூடாது என அறிவிப்பு புலகை வைக்க வேண்டும். இந்த உத்தரவை தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் அமல்படுத்த வேண்டும்.

எனவே, இந்துக்கள் அல்லாதவர்கள் கொடிமரத்துக்கு அப்பால் அனுமதிக்கமாட்டார்கள் என கோயில் நுழைவாயில் மற்றும் முக்கிய பகுதிகளில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். இந்து மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள், இந்துக்கள் அல்லாதவர்களை கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது. இந்துக்கள் அல்லாதவர்கள் யாராவது கோயிலுக்கு வந்தால் அவர்களிடம் இந்து கடவுள் மீதும், இந்து மதம் மீது நம்பிக்கை வைத்திருப்பதாகவும், கோயில் மரபுகளை பின்பற்றுவதாக உறுதிமொழி கடிதம் பெற வேண்டும். அதன் பிறகு அவர்களை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு உறுதியளித்து கோயிலுக்கு செல்லும் இந்து அல்லாதவர்கள் குறித்து கோயில்களில் தனிப்பதிவேடு பராமரிக்க வேண்டும். கோயில் வளாகத்தில் ஆகம விதிகள், பழக்க, வழக்கங்களை தீவிரமாக பின்பற்ற வேண்டும்’ என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x