Published : 30 Jan 2024 10:07 AM
Last Updated : 30 Jan 2024 10:07 AM

“காந்தி நினைவு நாளில் மதவெறிக்கு எதிராக இணைந்து குரல் கொடுப்போம்” - வைகோ அழைப்பு

“மதவெறிக்கு எதிராக மக்களை அணிதிரட்டி மதச்சிறுபான்மையினரை பாதுகாக்கவும், மோடி அரசின் எதேச்சதிகார பிடியில் இருந்து மக்களாட்சி மாண்புகளை காத்திடவும், காந்தியார் நினைவு நாளில் உறுதி ஏற்போம்” என்று மதிமுக பொதுச் செயலாளார் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “30.01.1948 அன்று மதவெறி சக்திகளால் உத்தமர் காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட கொடுமையை உலகம் என்றும் மறவாது. அதனை நினைவு கூறும் வகையில் தமிழ்நாடு பொதுமேடை - 2024 எனும் அமைப்பின் சார்பில் காந்தியார் படுகொலை நாளை சென்னை, கோவை, கன்னியாகுமரி, திருச்சி ஆகிய இடங்களில் “காந்தியைக் கொன்ற மதவெறி தொடரலாமா?” எனும் தலைப்பில் ஒன்றுகூடல் - கலை நிகழ்ச்சிகளை நடத்திட உள்ளதை அறிந்து பாராட்டுகிறேன்.

முன்னாள் நீதியரசர் து.அரிபரந்தாமன், முன்னாள் இந்திய ஆட்சிப் பணியாளர் கோ.பாலச்சந்திரன் ஆகியோர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் சிறப்புரை நிகழ்த்த உள்ளதை அறிந்து மனநிறைவு அடைகிறேன்.

காந்தியாரை கொலை செய்த கூட்டம் அதனை விழா எடுத்து கொண்டாடுவதும், அதன் பின்னணியில் செயல்பட்டவர்களை மாலை சூட்டி வரவேற்பதும், நடைபெறுவதற்கு சங்பரிவார் கூட்டத்தின் தலைமையிலான பாஜக அரசே காரணம் என்பதை நாம் அறிவோம். அவர்களை டெல்லி செங்கோட்டையில் இருந்து அகற்றுவதன் மூலம்தான் நாட்டில் மதநல்லிணக்கமும், சகோதரத்துவமும், ஜனநாயக நெறிமுறையும் ஏற்படுத்த முடியும் என்பதை நெஞ்சில் நிலைநிறுத்தி, காந்தியார் நினைவு நாளில் சூளுரை மேற்கொள்வோம்.

தமிழ்நாடு பொதுமேடை - 2024 நடத்தும் காந்தியார் படுகொலை நாள் நிகழ்ச்சிகளில் மறுமலர்ச்சி தி.மு.கழகம் பங்கேற்கும். கழகத் தோழர்களை இந்த நிகழ்ச்சிகளில் திரளாகக் கலந்து கொள்ளுமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

மதவெறிக்கு எதிராக மக்களை அணிதிரட்டி மதச்சிறுபான்மையினரை பாதுகாக்கவும், மோடி அரசின் எதேச்சதிகார பிடியில் இருந்து மக்களாட்சி மாண்புகளை காத்திடவும், காந்தியார் நினைவு நாளில் உறுதி ஏற்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x