Published : 30 Jan 2024 05:17 AM
Last Updated : 30 Jan 2024 05:17 AM

ஸ்பெயினில் ஐரோப்பிய முதலீட்டாளர்களுடன் மாநாடு: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தங்கள்

அரசுமுறை பயணமாக ஸ்பெயின் சென்றடைந்த முதல்வர் ஸ்டாலினை, அந்நாட்டுக்கான இந்திய தூதர் தினேஷ் பட்நாயக் வரவேற்று, பயணம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார். அருகில் தமிழக தொழில், வர்த்தக துறை அமைச்சர் டிஆர்பி ராஜா.

சென்னை: வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று, தமிழகத்தில் நிலவும் சாதகமான முதலீட்டு சூழல் குறித்து எடுத்துரைத்தார். இதைத் தொடர்ந்து, பல்வேறு தொழில் நிறுவனங்கள் முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டன.

தமிழகத்தை வரும் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக மாற்றும் முயற்சியில் தமிழக அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. இதற்காக ஏற்கெனவே தமிழகத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ள ஆட்டோமொபைல், தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி) ஆகிய துறைகளை தாண்டி, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ), மின் வாகனத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் தொடர்ந்து முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில், சென்னையில் கடந்த ஜனவரி 7, 8-ம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ரூ.6.64 லட்சம் கோடிக்கான புதிய முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தென் மாவட்டங்களில் அதிக அளவிலான முதலீடுகள் இதில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுதவிர குறு, சிறு, நடுத்தர தொழில்நிறுவனங்கள் அதிக அளவில் தமிழகத்தில் தொழில் விரிவாக்கம், புதிய முதலீடுகளை மேற்கொண்டுள்ளன.

இதுமட்டுமின்றி, முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நாடுகளுக்கும் சென்று, முதலீடுகள் தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொண்டார். கடந்த 2022-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக சென்றார். அந்த பயணத்தில், 15 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ரூ.6,100 கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அதைத் தொடர்ந்து, கடந்த 2023 மே மாதம் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில்,ரூ.1,342 கோடி முதலீட்டுக்கானஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஒப்பந்தங்கள் மூலம் பல்வேறு நிறுவனங்கள் தற்போது தொழில்களை தொடங்கியுள்ளன. பல நிறுவனங்கள் தொடர்ந்து தங்கள் விரிவாக்க பணிகளையும் மேற்கொண்டு வருகின்றன.

இதுதவிர, தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அமைச்சர்களும் அவ்வபோது வெளிநாடுகளில் நடைபெறும் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று, தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான சூழல் குறித்து விவரிப்பதுடன், துறைகளில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை புகுத்துவதற்கான ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சூழலில், தமிழகத்துக்கு மேலும் பல புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதல்வர் ஸ்டாலின் தற்போது வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். அரசுமுறை பயணமாக சென்னையில் இருந்து கடந்த 27-ம் தேதி இரவுபுறப்பட்ட முதல்வர் ஸ்டாலின், 28-ம் தேதி மாலை ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட் சென்றார்.

இந்திய தூதர் வரவேற்பு: அங்கு முதல்வரை, ஸ்பெயினுக்கான இந்திய தூதர் தினேஷ்கே.பட்நாயக், தூதரக அதிகாரிகளுடன் சென்று வரவேற்றார். ஸ்பெயின் பயணம் வெற்றி பெறுவதற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது, தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா உடன் இருந்தார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில், ‘ஸ்பெயின் வந்தடைந்தேன். ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, முதல்முறையாக ஐரோப்பிய பயணம். ஸ்பெயினுக்கான இந்திய தூதர் தினேஷ் பட்நாயக், தூதரக அதிகாரிகளுடன் சிறப்பான வரவேற்பை அளித்தார். இன்று மாலை ஸ்பெயின் நாட்டின் தொழில் அமைப்புகள் மற்றும் அந்நாட்டில் செயல்படும் பெரும் தொழில் நிறுவனங்களை சார்ந்தவர்களை சந்திக்கிறேன். தமிழகத்தில் நிலவும் வாய்ப்புகள் மற்றும் இளைஞர் வளத்தை எடுத்துக்கூறி முதலீடுகளை ஈர்க்க உள்ளேன்’’ என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தொழில் அமைப்புகள் மற்றும் ஸ்பெயின் நாட்டின் பெரும் தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று நடந்தது. தமிழகத்தில் நிலவும் சாதகமான முதலீட்டு சூழல் பற்றியும், தமிழக கட்டமைப்பு வசதிகள், மனிதவள ஆற்றல் போன்றவற்றின் சிறப்பம்சங்களையும் விளக்கி பேசிய முதல்வர், தமிழகத்தில் முதலீடுகளை அதிக அளவில் ஈர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.

இதைத் தொடர்ந்து பல்வேறு தொழில் நிறுவனங்களை சேர்ந்த நிர்வாகிகள், பிரதிநிதிகள் தங்களது முதலீடுகள் தொடர்பாக தொழில் வர்த்தக அமைப்புகள் வாயிலாக, தமிழக தொழில் துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். முதலீடுகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு ஒப்பந்தங்களையும் மேற்கொண்டனர். இந்த நிகழ்வுகளில் அமைச்சர் டிஆர்பி ராஜா, தொழில் துறை செயலர் வி.அருண்ராய், துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

முன்னதாக, விமான பயணத்தின்போது டென்னிஸ் முதல் நிலைவீரர் நோவாக் ஜோகோவிச்சை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x