Published : 30 Jan 2024 06:10 AM
Last Updated : 30 Jan 2024 06:10 AM

உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி: மாநகராட்சி ஆணையர் தொடங்கிவைத்தார்

சென்னை: இந்தியத் தேர்தல் ஆணையம் சார்பில் மக்களவை தேர்தலுக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் சென்னையில் நேற்று தொடங்கிவைத்தார்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறஉள்ளது. இத்தேர்தல்களின்போது, வேட்புமனு தாக்கல், வேட்புமனுக்கள் பரிசீலனை, சின்னங்கள் ஒதுக்கீடு, தேர்தல் நடத்தை விதிகளை முறையாக அமல்படுத்துவது, விதிமீறல்கள் குறித்து புகார் அளிப்பது, தேர்தல் பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் தேர்தல் பார்வையாளர்களுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள். பொதுத்தேர்தல்களின்போது இவர்கள் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது.

அதனால் தேர்தல் ஆணைய அறிவுறுத்தல் படி, வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, திருவள்ளூர், பெரும்புதூர், அரக்கோணம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 8 மக்களவை தொகுதிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான 5 நாட்கள் நடைபெறும் சான்றிதழ் பயிற்சிவகுப்பு ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் சென்னை மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஜெ.ராதாகிருஷ்ணன் பங்கேற்று, பயிற்சி வகுப்பைத் தொடங்கிவைத்தார். இப்பயிற்சியின் நிறைவில், பயிற்சியில் பங்கேற்ற அனைவரும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

இந்த பயிற்சி வகுப்பில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆர்.லலிதா, மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்) சி.சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x