Published : 29 Jan 2024 04:37 PM
Last Updated : 29 Jan 2024 04:37 PM
மதுரை: பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டு 5 ஆண்டுகளாகியும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி தொடங்கப்படாததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மதுரை தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிக்காக 2019-ம் ஆண்டு ஜன. 27-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக இந்நிகழ்ச்சி நடந்தது. அப்போது 45 மாதங்களில் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என்று பிரதமர் தெரிவித்தார். தற்போது அடுத்த (2024) மக்களவைத் தேர்தல் வந்துவிட்டது. இன்னும் மருத்துவமனை கட்டி முடிக்கப்படவில்லை.
அவ்வப்போது மத்திய, மாநில அமைச் சர்களால் கட்டுமானப் பணி தொடர்பாக அறிவிப்புகள் மட்டுமே வெளியாகி வருகின்றன. ஆனால், 5 ஆண்டுகளாக பணிகள் தொடங்கப்படவில்லை. இதுவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் சுற்றுச்சுவர் கட்டும் பணி மட்டுமே நடந்துள்ளது.
அண்மையில் மெயின் டெண்டருக்கு முந்தைய ‘ப்ரீ டெண்டர்’ வெளியிடப்பட்டுள்ளதால் கட்டுமானப் பணி விரைவில் தொடங்கும் என்று மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், அந்த நடவடிக்கையும் வேகம் பெறவில்லை.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிக்கு ஜப்பானின் ஜெய்கா நிறுவனத்துடன் 2021-ம் ஆண்டு கடன் ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், கட்டுமானப் பணிகளை தொடங்குவதில் தொடர்ந்து இழுபறி நிலை நீடிக்கிறது.
தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த வகுப்புகளை மதுரைக்கு மாற்ற வாடகை கட்டிடத்தை அதிகாரிகள் பார்த்து வருகின்றனர்.
இதனிடையே, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணி மதிப்பீடு ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு மொத்த மதிப்பீடாக ரூ.1977.8 கோடி முடிவு செய்யப்பட்டு, அதில் 82 சதவீதமான ரூ.1627.7 கோடியை ஜப்பானைச் சேர்ந்த ஜெய்கா நிறுவனமும், 18 சதவீதத் தொகையான ரூ.350.1 கோடியை மத்திய அரசும் வழங்கும் என்று கூறப்பட்டது. தற்போது இந்த ஆண்டு திட்ட மதிப்பீடு மாற்றப்பட்டு இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் மதுரை ஜல்லிக்கட்டு அரங்க திறப்பு விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘மாநிலத்தில் திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் மதுரைக்கு அறிவித்த கீழடி அருங்காட்சியகம், கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம், கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் ஆகியவை திறக்கப்பட்டுள்ளன.
ஆனால், மதுரைக்கு மத்திய பாஜக அரசால் கொண்டு வரப்படாத ஒரு திட்டம் இருக்கிறது. அது உங்கள் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பில்லை’ என்று எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி தொடங்கப்படாததைச் சுட்டிக்காட்டினார்.
மத்திய அரசை முதல்வர் குறை கூறினாலும், தமிழகத்துக்கு அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர மாநில அரசு என்ற அடிப்படையில் ஆக்கப்பூர்வமாக என்ன முயற்சி எடுக்கப்பட்டது என்று மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது.
மதுரை எய்ம்ஸ் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தொடர்ந்து விண்ணப்பித்து பல்வேறு தகவல்களைப் பெற்று வரும் சமூக ஆர்வலர் தென்காசி பாண்டியராஜா கூறியதாவது:
நாட்டின் பல்வேறு இடங்களில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டுமானப் பணி முடிவடைந்து பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. ஆனால், மதுரைக்கு அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மட்டும் அறிவிப்போடு நிற்கிறது. நிலம் கையகப்படுத்துதல், கடன் ஒப்பந்தம் கையெழுத்து என்று காலம் தாழ்த்தப்பட்ட நிலையில் தற்போது ப்ரீ டெண்டர் வெளியிடப்பட்டு அந்த நடவடிக்கையும் விரைவுபடுத்தப்படவில்லை. இதற்கிடையே, மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
தேர்தல் முடிந்து அடுத்த ஆட்சி அமைந்த பின்புதான் கட்டுமானப் பணி மேற்கொள்ளப்படுமா? அல்லது தேர்தலை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட நிதியை ஒதுக்கீடு செய்து மத்திய அரசு கட்டுமானப் பணியைத் தொடங்குமா? என்பது தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...