Published : 29 Jan 2024 03:17 PM
Last Updated : 29 Jan 2024 03:17 PM

தமிழகத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் 134 இறால் பண்ணைகளை மூட தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் அனுமதியின்றி, சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் 134 இறால் பண்ணைகளை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகாவில், சட்ட விதிகளுக்கு முரணாக, உரிய அனுமதியை பெறாமல் செயல்பட்டு வந்த இறால் பண்ணைகளை மூடும்படி, மீன்வளத்துறை உதவி இயக்குநர், கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து இறால் பண்ணைகளின் உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்குகள், நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் கடலோர மீன்வளர்ப்பு ஆணைய சட்டப்படி, கடலில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்துக்குள் தான் இறால் பண்ணைகளை அமைக்க வேண்டும். மனுதாரர்களின் இறால் பண்ணைகள் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பண்ணைகள், உரிய அனுமதிகளைப் பெறாமல் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, அந்த பண்ணைகளை மூட உத்தரவிடப்பட்டது.

மேலும், தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 709 இறால் பண்ணைகள் உள்ளன. அவற்றில் 2 ஆயிரத்து 227 பண்ணைகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டவை. 348 பண்ணைகளின் அனுமதி கோரிய விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. 134 பண்ணைகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டு, தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, அனுமதியின்றி செயல்பட்ட மனுதாரர்களின் இறால் பண்ணைகளை மூடும்படி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் இறால் பண்ணைகளை மூடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

அதேபோல, சட்டவிரோதமாக இறால் பண்ணை நடத்தியவர்களுக்கு எதிராக ஆறு வாரங்களில் வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்கத் தவறிய அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x