Published : 29 Jan 2024 06:38 AM
Last Updated : 29 Jan 2024 06:38 AM

டாஸ்மாக் மதுபானங்கள் விலை பிப்.1 முதல் உயர்கிறது: ரூ.10 முதல் ரூ.80 வரை அதிகரிக்கும் என தகவல்

சென்னை: டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விலை ரூ.10 முதல் 80 வரை அதிகரிக்கக்கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த விலை உயர்வு பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலாக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் 4,829 டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. டாஸ்மாக் கடைகளில் 43 சாதாரண வகை, 49 நடுத்தர வகை, 128 பிரீமியம் வகை பிராண்டுகள், 35 வகையான பீர், 13 ஒயின் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன. இதுதவிர, ‘எலைட்’ டாஸ்மாக் கடைகள் மூலம் பிரத்யேகமாக வெளிநாட்டு மதுபானங்கள் விற்கப்படுகின்றன.

பொதுவாக, டாஸ்மாக் கடைகளில் சாதாரண மதுபான வகைகள்தான் சுமார் 40 சதவீத அளவுக்கு விற்பனையாகின்றன. இதில் குவார்ட்டர் பாட்டில் ரூ.130, ஆஃப் பாட்டில் ரூ.260, ஃபுல் பாட்டில் ரூ.520 என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. மீடியம் ரேஞ்ச் மதுபானங்கள் ரூ.160 முதல் ரூ.640 வரை விற்கப்படுகின்றன.

ஆண்டுதோறும் மதுபானங்களின் விலையை டாஸ்மாக் நிர்வாகம் அதிகரித்து வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில், பிப்ரவரி மாதம் முதல் மதுபானங்களின் விலையை உயர்த்த டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, சாதாரண மற்றும் நடுத்தர வகை மதுபானங்கள் குவார்ட்டர் பாட்டிலுக்கு ரூ.10, ஆஃப் பாட்டிலுக்கு ரூ.20, ஃபுல் பாட்டிலுக்கு ரூ.40 விலை உயர்த்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

மூலப்பொருட்கள் விலை உயர்வு: அதேபோல, பிரீமியம் வகையில் குவார்ட்டர் பாட்டிலுக்கு ரூ.20, ஆஃப் பாட்டிலுக்கு ரூ.40, ஃபுல் பாட்டிலுக்கு ரூ.80 மற்றும் அனைத்து பீர் வகைகளும் ஒரு பாட்டிலுக்கு ரூ.10 உயர்த்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

வரி உயர்வு, மூலப் பொருட்கள் விலை உயர்வு காரணமாக, மதுபானங்களின் விலையை உயர்த்த வேண்டும் என மதுபான ஆலை நிறுவனங்கள் தமிழக அரசுக்கு தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்ததன் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த விலை உயர்வு பிப்ரவரி 1-ம் தேதி அமலாகும் என்றும் கூறப்படுகிறது.

ஆனால், இதுதொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்று டாஸ்மாக் மண்டல மேலாளர்கள் தெரிவித்துள்ளனர். டாஸ்மாக் கடைகளில் ஊழியர்கள் ஏற்கெனவே ஒரு பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x