Published : 29 Jan 2024 07:17 AM
Last Updated : 29 Jan 2024 07:17 AM
நாகப்பட்டினம்: கீழ்வெண்மணி தியாகி பழனிவேலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று சந்தித்து நலம் விசாரித்தார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று நாகப்பட்டினம் வந்தார். தொடர்ந்து, கீழ்வேளூர் ஒன்றியம் கீழவெண்மணியில் உள்ள தியாகிகள் நினைவு இல்லத்துக்குச் சென்றார்.
அங்கு, கீழ்வெண்மணியில் 1968-ல் நடந்த படுகொலை யின்போது, துப்பாக்கி குண்டுபட்டு காயமடைந்து, உயிர்பிழைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிஉறுப்பினர் தியாகி ஜி.பழனிவேலை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், அவரிடம் கீழ்வெண்மணி சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.
இதுகுறித்து தியாகி ஜி.பழனிவேல் செய்தியாளர்களிடம் கூறும்போது, "உடல்நிலை சரியில்லாதபோதும், இந்த சந்திப்பு மூலம் இப்பகுதி மக்களின் வாழ்க்கை தரம் மேம்பட வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டு, கண்ஆபரேஷனுக்காக மருத்துவமனைக்குச் செல்லாமல் ஆளுநரை சந்தித்தேன்.
நிலச்சுவான்தாரர்களால் பாதிக்கப்பட்ட அடித்தட்டு மக்கள்தான் இந்தப் பகுதியில் அதிகம் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு வீடு கட்டித்தர வேண்டும், சாலை வசதியை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ஆளுநரிடம் முன்வைத்தேன். அவற்றை ஆளுநர் விரைவில் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.
பின்னர், ஆளுநர் அங்கிருந்து காரில் புறப்பட்டு வேளாங்கண்ணி சென்றார். அங்கு புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் பிரார்த்தனை செய்த ஆளுநர், தொடர்ந்து நாகை நம்பியார் நகரில் உள்ள புதிய ஒளி மாரியம்மன் கோயிலில் வழிபாடு செய்தார். அப்போது, அப்பகுதி மீனவச் சிறுவர்கள் மலர் தூவி ஆளுநரை வரவேற்றனர்.
இதையடுத்து, பொரவச்சேரியில் தமிழ் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர், பெருங்கடம்பனூரில் கட்டப்பட்டுள்ள 25 வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
கருப்புக் கொடி... ஆளுநர் வருகையை கண்டித்து, கீழ்வெண்மணி வீரத் தியாகிகளின் 25-வது ஆண்டு நினைவுவளைவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வி.மாரிமுத்து, காங்கிரஸ் மாவட்டத்தலைவர் ஆர்.என்.அமிர்தராஜா ஆகியோர் தலைமையில், விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கருப்புக் கொடியேந்தி திரளாக வந்தனர். அவர்களைப் போலீஸார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
முன்னதாக ஆளுநர் ஆர்.என்.ரவி, நாகை செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்து, அங்கிருந்து திருவாரூர் விளமலில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அங்கு மதிய உணவை முடித்துக் கொண்டு, பகல் 1.40 மணிக்கு நாகை புறப்பட்டுச் சென்றார்.
இதற்கிடையில், ஆளுநர் வருகையைக் கண்டித்து, திருவாரூர் ரயில் நிலையம் அருகே நாகை எம்.பி. செல்வராஜ் தலைமையில் பல்வேறு கட்சியினர் கருப்புக்கொடி காட்ட வந்தனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி, எம்.பி.செல்வராஜ் உட்பட 200 பேரைக் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT