Last Updated : 03 Feb, 2018 08:49 AM

 

Published : 03 Feb 2018 08:49 AM
Last Updated : 03 Feb 2018 08:49 AM

43 ஆண்டுகளாக தொடரும் ‘ரகசியம் பரம ரகசியம்’

லண்டனில் தொடர்ந்து 66 ஆண்டு களாக ஒரு நாடகம் தினந்தோறும் மேடையேறி சாதனை செய்து வருகிறது. அகதா கிறிஸ்டி எழுதிய ‘தி மவுஸ் ட்ராப்’ என்பதுதான் அந்த நாடகம். இந்திய அளவில் ஒரு நாடகம், தினந்தோறும் இல்லாவிட்டாலும் 43 ஆண்டுகளாக அடிக்கடி மேடையேறி ரசிகர்களை மகிழ்விக்கிறது.

1975-ம் ஆண்டில் முதன்முதலாக ‘யுஏஏ’ குழுவினரால் அரங்கேற்றப்பட்ட ‘ரகசியம் பரம ரகசியம்’ நாடகம்தான் அது. தொடர்ந்து அந்நாடகத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் ஒய்.ஜி.மகேந்திரன். இந்நாடகத்தில் ஒய்ஜிஎம் மற்றும் சுப்புணி இருவரும் நாடகம் முதன்முதலாக அறங்கேறியபோது ஏற்ற அதே கதாபாத்திரங்களை இன்றளவும் ஏற்று நடிப்பது மேலும் சிறப்பாகும்.

நாடகத் திரைச்சீலையாய் அசையும் சில நினைவுகள்: ‘ரகசியம் பரம ரகசியம்’ நாடகத்தில் அன்றைய நாட்களில் ஒய்.ஜி.பார்த்தசாரதி மற்றும் ஏ.ஆர்.எஸ் போன்ற நாடக ஜாம்பவான்கள் நடித்தபோது நாடக அரங்கமே அதிர்ந்த காட்சி இன்றும் நெஞ்சில் பசுமைத் தோரணம் கட்டுகிறது. ‘ப்ளைட் 172’ மற்றும் ‘குருக்ஷேத்திரம்’ போன்ற வெற்றி நாடகங்களைக் கொடுத்துவிட்டு, நடிகர் மற்றும் இயக்குநர் மவுலி ‘யுஏஏ’ நாடகக் குழுவைவிட்டு விலகிஇருந்த சமயம் அது.

தங்களுடைய அடுத்த நாடகத்துக்கு ஒரு நல்ல கதையை ‘யுஏஏ’ தேடிக் கொண்டிருந்தபோது, வெங்கட் என்ற இளைஞர் தனது கதையை ஒய்.ஜி.மகேந்திரனிடம் கூற, அது அவருக்குப் பிடித்துப் போக பிறந்ததுதான் ‘ரகசியம் பரம ரகசியம்’.

அன்றைக்கு தனது 24 வயதில் மேடையில் காட்டிய அதே துடி துடிப்பை 66-ம் வயதில் இன்றைக்கும் ஒய்.ஜி.எம். காட்டுவது, மேடை நாடகம்தான் அவரது உயிர்த் துடிப்பு என்பதை நிரூபிக்கிறது. அவருக்கு துளியும் சளைக்காமல் சுப்புணியும் அதே போல் மிளிர்கிறார்.

1975-2018 கால இடைவெளியில் இந்த நாடகத்தை நான் பலமுறை பார்த்துள்ளேன். அந்த ஊதுவத்தி ஸ்டாண்ட், மற்றும் அப்பளாம் போன்ற நகைச்சுவை இடம்பெறும் காட்சிகள் ரசிகர்களின் பேராதரவைத் தொடர்ந்து பெறுவது பெருமைக்குரிய விஷயம்.

நாடகம் குறித்து ஒய்.ஜி.எம் குறிப்பிடும்போது, “வெங்கட் இக்கதையை சொன்னபோது, ஊதுவத்தி ஸ்டாண்ட் நகைச்சுவையை முதலில் சொல்லிவிட்டுத்தான் மேற்படி கதையைத் தொடர்ந்தார். எனக்கு கதை பிடித்துப் போக, என் தந்தையிடம் அழைத்துச் சென்றேன். அவரும் வெங்கட்டின் கதையை ஏற்றுக்கொண்டார். ‘மர்பி’ என்ற பாதிரியாராக ஏ.ஆர்.எஸ் நடித்து அப்பாத்திரத்துக்கே புதியதொரு பரிமாணம் கொடுத்தார்.

அவருக்குப் பிறகு அப்பாத்திரத்தில் ரவி ராகவேந்தரும் நடித்துள்ளார். இப்போது அதே ‘மர்பி’ பாத்திரத்தில் பாலாஜி நடிக்கிறார். அவரும் தனது ‘பளிச்’ நடிப்பை பதித்து வருகிறார்’’ என்றார்.

நாடக இறுதிக் காட்சியில், ஒய்.ஜி.எம். நேர்த்தியான நடிப்பால் நம்மையெல்லாம் சோக வெள்ளத்தில் மூழ்கவிடுவார், இந்நாடகம் வானொலியில் தொடர் நாடகமாக வந்தபோதும், கடைசி காட்சியில் வசன உச்சரிப்பால் நம்மை கலங்க வைத்துவிடுவார். 43 ஆண்டுகளுக்குப் பிறகும் அக்காட்சி, நாடகம் பார்ப்பவர்களின் மனதை பிசைந்துவிடும்.ஜெர்மன் நாடகக் கலைஞர் பெட்ரால்ட் ப்ரெஷ்ட் சொன்னதைப் போல ‘ஒரு நல்ல நகைச்சுவை நடிகனே, ஒரு சிறந்த குணச்சித்திர நடிகனும் ஆவான்’ என்ற கூற்றுக்கு, ஒய்.ஜி.எம். சிறந்த உதாரணம்.

நல்ல கதை, நல்ல வசனம், நல்ல நடிப்பு போன்றவற்றால் ‘யுஏஏ’ நாடகக் குழுவின் ‘ரகசியம் பரம ரகசியம்’ அரங்கேறிய இடங்களில் எல்லாம் வெற்றிவாகை சூடி வருவது, தமிழ் நாடக மேடைக்குக் கிடைத்து வரும் கலைப் பெருமை!

இன்று மாலை - சென்னை வாணி மகாலில் நடைபெறவுள்ள இந்நாடகத்துக்கான டிக்கெட் அரங்கத்தில் விற்பனை செய்யப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x