Published : 11 Feb 2018 07:00 AM
Last Updated : 11 Feb 2018 07:00 AM

மாலத்தீவுக்கு இந்திய தூதர்களை அனுப்பி அமைதியை நிலைநாட்ட வேண்டும்: இந்திய - மாலத்தீவு நட்புறவு கழகம் வலியுறுத்தல்

மாலத்தீவுக்கு இந்திய தூதர்களை அனுப்பி அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று மாலத்தீவில் உள்ள இந்திய - மாலத்தீவு நட்புறவு கழக நிறுவனர் ஹிம்மத் ஹுசைன் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய - மாலத்தீவு நட்புறவு கழகத்தின் நிறுவனர் ஹிம்மத் ஹுசைன் கூறியதாவது:

இலங்கையில் சிகிச்சை பெற்றுவரும் மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நசீத், மாலத்தீவுக்கு இந்திய ராணுவத்தை அனுப்பி அமைதியை நிலை நாட்ட கோரிக்கை விடுத்துள்ளார். 1988-ல் மாலத்தீவின் தொழிலதிபர்கள் அப்துல்லா லுதூபீ, சிக்கா அஹ்மத் ஆகியோர் அப்போதைய அதிபர் அப்துல் கயூமை நாட்டை விட்டு துரத்தி ஆட்சியை கைப்பற்ற முயன்றனர். இதற்காக இலங்கையில் இயங்கி வந்த தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தைச் சேர்ந்த (ப்ளாட்) உமா மகேஸ்வரன் தலைமையில் மாலத்தீவைக் கைப்பற்றினர்.

அப்போது, இந்தியாவின் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியிடம் அதிபர் அப்துல் கயூம் உதவி கோரினார். இந்தியாவில் இருந்து 1600 ராணுவ வீரர்களை மாலத்தீவுக்கு அனுப்பினார் ராஜீவ் காந்தி. ஆப்ரேஷன் காக்டஸ் என்ற பெயரில் மாலத்தீவை மீட்கும் பணியில் இந்திய ராணுவத்தினர் ஈடுபட்டனர். 12 மணி நேரத்தில் மாலத்தீவின் விமான நிலையம், துறைமுகம், வானொலி நிலையம் உள்ளிட்டவற்றை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததுடன், அதிபர் அப்துல் கயூமும் மீட்கப்பட்டார்.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா மாலத்தீவில் ராணுவத்தின் மூலம் அமைதியை நிலைநாட்டியது. தற்போது இந்தியா தனது தூதர்களை மாலத்தீவுக்கு அனுப்பி அமைதியை நிலை நாட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x