Published : 28 Jan 2024 11:47 PM
Last Updated : 28 Jan 2024 11:47 PM
நாமக்கல்: மக்களவை தேர்தலில் 40 இடங்களிலும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடையே பேசினார். இந்த பேச்சு, நாமக்கல் நகர பாஜக சார்பில் நாமக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியை மத்திய தகவல் ஒளிபரப்பு துறை, கால்நடை பால்வளம், மீன்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் பொதுமக்களுடன் அமர்ந்து பார்வையிட்டார். நிகழ்ச்சிக்கு பின் இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாரத பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் நிகழ்ச்சி மூலமாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை 109-வது முறையாக மனதின் குரல் நிகழ்ச்சி நடைபெற்றது. தனிப்பட்ட நபர்களால் மேற்கொள்ளப்படும் சமுதாய பணிகளை பாராட்டி, மத்திய அரசின் மூலம் அவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
அவ்வாறு விருது பெற்றவர்களை, மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் பாராட்டியுள்ளார். தமிழகத்தில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பத்ரப்பன் என்பவர் அழிந்து வரும் நாட்டுப்புற பாடல்களை பொதுமக்களுக்கு எடுத்துச் சென்றதைப் பாராட்டியும், பல்வேறு சமூக நலப்பணிகளை செய்த மறைந்த நடிகர் விஜயகாந்தை பாராட்டியும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இண்டியா கூட்டணி: இண்டியா கூட்டணியில் உள்ள திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மக்களை குழப்பும் கூட்டணி என்று ஏற்கெனவே கூறப்பட்டது. தற்போது தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தனியாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். தற்போது பிஹாரில் நிதிஷ்குமாரும் கூட்டணியை மாற்றியுள்ளார்.
கேரளாவில் கமயூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியும் ஒரே கூட்டணியில் எப்போதும் போட்டியிட முடியாது. மேலும், தமிழகத்திலும் இண்டியா கூட்டணியில் உள்ள சில கட்சிகள் வெளியேறுவதற்கு தயாராகி வருகின்றன. உலகத்திலேயே மிகப்பெரிய கட்சியாக பாஜக விளங்கி வருகிறது. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்றத்திலும் அதிக பெரும்பான்மை பலம் பெற்று விளங்குகிறது. தமிழகத்தில் 4 பாஜக எம்எல்ஏக்கள் தற்போது உள்ளனர். புதுச்சேரியில் ஒரு பாஜக ராஜ்யசபா எம்.பி உள்ளார். தற்போது தமிழகத்தில் அதிகமான பொதுமக்கள் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க தயாராகி வருகின்றனர்.
வரும் மக்களவை தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து 40 தொகுதிகளிலும் நிச்சயம் வெற்றிபெறும். அகில இந்திய அளவில் பாஜக 400-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி 3-வது முறையாக இந்திய பிரதமராவது உறுதி செய்யப்பட்டதாகும் என அவர் கூறினார். அப்போது நகர பாஜக தலைவர் சரவணன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT