Published : 28 Jan 2024 01:53 PM
Last Updated : 28 Jan 2024 01:53 PM
சென்னை: மக்களவைத் தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் திமுக தலைமையகத்தில் இன்று நடைபெறவுள்ள தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின் போது 14 தொகுதிகளைக் கேட்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மக்களவைத் தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று காங்கிரஸில் தேசிய அளவில் ப.சிதம்பரம் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, மாநில அளவில் கே.எஸ்.அழகிரி தலைமையில் முன்னாள் மாநிலதலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, எம்.பி.க்கள் உள்ளிட்ட 31 பேர் கொண்ட தேர்தல் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் நியமித்த தேசிய கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைப்பாளர் முகுல் வாஸ்னிக், முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜோய் குமார், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை ஆகியோர் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் ஆகியோருடன் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை நடத்தினர்.
மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு முதற்கட்ட பேச்சுவார்த்தை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை நடைபெறவுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின்போது, 21 தொகுதிகள் அடங்கிய பட்டியலை திமுகவிடம் வழங்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இதிலிருந்து தங்களுக்கு 14 தொகுதிகளை ஒதுக்க காங்கிரஸ் கோரிக்கை வைக்க இருக்கிறது. இந்தப்பட்டியலில், கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகளுடன், மேலும் 12 தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. திருநெல்வேவில், ராமநாதபுரம், தென்காசி, திண்டுக்கல், திருவண்ணாமலை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், தென் சென்னை மற்றும் அரக்கோணம் ஆகிய 12 தொகுதிகள் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT