Published : 28 Jan 2024 11:31 AM
Last Updated : 28 Jan 2024 11:31 AM

தூய்மை பணியாளர்களை கவுரவிப்பதாக அழைத்து அவமதிப்பு - விருதுநகர் நிர்வாகத்துக்கு உள்ளாட்சி பணியாளர்கள் கண்டனம்

சென்னை: விருதுநகர் மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களை கவுரவிப்பதாக அழைத்து அலைக் கழிப்பு செய்து, அவமதித்ததாக மாவட்ட நிர்வாகத்துக்கு தமிழக உள்ளாட்சித் துறை பணியாளர் சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக உள்ளாட்சி துறை பணியாளர் சம்மேளனம் ( ஏஐடியுசி ) பொதுச்செயலாளர் ம.இராதா கிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கவுரவிப்பதற்காக தூய்மை பணியாளர், தூய்மை காவலர், மேல்நிலைத் தொட்டி இயக்குபவர், சுகாதார ஊக்குனர்கள் மற்றும் மகளிர் திட்ட தொழிலாளிகள் அனைவரையும் வரவழைத்துள்ளனர்.

ஆனால், அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டு சான்று மற்றும் பதக்கம் வழங்கி விட்டு தொழிலாளர்களுக்கு திட்ட இயக்குநர் வழங்குவதாக தெரிவித்துள்ளார். திட்ட இயக்குனரோ தொழிலாளர்களை அவரது அலுவலகத்துக்கு வரச்சொல்லி உள்ளார். அவ்வாறு வந்த தொழிலாளர்களை மதியம் ஒரு மணி வரை காத்திருக்க வைத்துவிட்டு, கடைசியில் உதவி இயக்குநர் தணிக்கையை வைத்து சான்று மட்டும் வழங்கி அனுப்பியுள்ளார்.

தொழிலாளிகள் அவமதிப்பு: மக்கள் மத்தியில் விழா நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் வழங்க வேண்டிய கவுரவத்தை இதுபோன்று இழுத்தடிப்பு செய்து வழங்கியது தொழிலாளர்களை கவுரவிப்பது ஆகாது; மாறாக அவமதிக்கும் செயலாகும். சிறப்பாக பணியாற்றியதற்காக கவுரவிக்க தேர்வு செய்யப்பட்ட தொழிலாளிகளை இவ்வாறு அவமதித்தது மேலாதிக்க மனநிலையை வெளிப்படுத்துவதோடு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் படியும் தண்டனை தரத்தக்க குற்றமாகும்.

கடை நிலையில் பணிபுரியும் சமூகத்தின் கடை கோடியில் உள்ள இத்தொழிலாளர்களை கவுரவிக்கவில்லை என்றாலும் இது போன்று வரவழைத்து அலைக் கழிப்பு செய்து, அவர்களை அவமதிக்காமலாவது இருந்திருக்கலாம். இந்த செயலை தமிழக உள்ளாட்சி பணியாளர் சம்மேளனம் ( ஏஐடியுசி ) வன்மையாக கண்டிக்கிறது. மேலும், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உணர்ந்து கொள்ளும் வகையில், அவர்கள் மீது தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x