Published : 28 Jan 2024 09:32 AM
Last Updated : 28 Jan 2024 09:32 AM

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இணையாக கடற்கரை - வேளச்சேரி வழித்தட நிலையங்களை மேம்படுத்த திட்டம்

பிரதிநிதித்துவப் படம்

சென்னை: சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையேயான பறக்கும் ரயில் சேவையை ஏற்று நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இத்தடத்தில் உள்ள நிலையங்களை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இணையாக மேம்படுத்துவது தொடர்பாக ஐஐடி குழு விரைவில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது.

சென்னையில் மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வதில் புறநகர் மின்சார ரயில்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இவற்றில், சென்னை கடற்கரை - வேளச்சேரி வழித்தடம், பறக்கும் ரயில் வழித் தடம் என்ற பெயரில் இயங்கு கிறது. இந்த வழித் தடத்தில் 17 ரயில் நிலையங்கள் உள்ளன. கடற்கரை - வேளச்சேரி தடத்தில் தினசரி 100-க்கும் மேற்பட்ட மின்சாரரயில் சேவைகள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது பாதைக்கான பணி நடப்பதால், சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி இடையே மட்டும் ரயில்கள் இயக்கப்படுகிறது.

இதனிடையே, சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில்சேவையை ஏற்று நடத்த சென்னைமெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், ரயில் இயக்கம் முதல் வாகன நிறுத்தம் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் கையகப்படுத்தி மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, பறக்கும் ரயில்நிலையங்களை மறுசீரமைப்பு செய்து, மெட்ரோ ரயில் நிலையம்போல மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, பறக்கும் ரயில் தடத்தில் உள்ள நிலையங்களை எப்படி மேம்படுத்துவது என்பது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த மாதம் இறுதியில் ஆய்வு செய்யத் தொடங்கியது. முதல் கட்டமாக, திருவல்லிக்கேணி, திருமயிலை ஆகிய இரண்டு ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக, திருவல்லிக்கேணி, திருமயிலை பறக்கும் ரயில் நிலையங்களில் சென்னை ஐஐடி குழு விரைவில் ஆய்வு மேற்கொண்டு, மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது. இதில், வணிக வளர்ச்சி மற்றும் பயணிகள் வசதிகள் அடங்கும். அறிக்கையின் அடிப்படையில், அனைத்து பறக்கும் ரயில் நிலையங்களையும் மேம்படுத்த ஏஜென்சியை நியமிக்கும் பணியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ளும்.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: ஐஐடி ஆய்வில் சொத்து மேம்பாட்டுக்கான செலவை மதிப்பிடுவது மற்றும் தானியங்கி கட்டணவசூல், பார்க்கிங், சிசிடிவி கேமரா போன்ற பிற மேம்பாட்டு பணிகள் இடம் பெறும். பறக்கும் ரயில் நிலையங்களை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு இணையாக மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்படும். இது தொடர்பான அறிக்கை ஒரு மாதத்தில் கிடைக்கும்.

இதைத் தொடர்ந்து, விரிவான திட்ட அறிக்கையையும் தயார் செய்வோம். அதில், பயணிகள் போக்குவரத்து, இரண்டாம் கட்டத்துடன் ஒருங்கிணைப்பு, தேவையான பெட்டிகளின் எண்ணிக்கை மற்றும் பயணிகள் வசதிகள் போன்ற விவரங்கள் இருக்கும். விரிவான திட்ட அறிக்கையுடன் நிதியுதவி பெற முயற்சி எடுப்போம்.

நாங்கள் ஏஜென்சிக்கு வழிகாட்டுதல்களை வழங்கிய பிறகு, ஒவ்வொரு நிலையத்தையும் எவ்வாறு சிறப்பாக உருவாக்குவது என்பதை அவர்கள் வரைவார்கள். இந்த நிலையங்களை மெட்ரோ ரயில் தரத்துக்கு கொண்டு வருவதே திட்டமாகும். இதை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்ற பிறகு, நிலையத்தை மேம்படுத்தும் பணிக்கு குறைந்தது ஒராண்டாவது ஆகும். அதுவரை ரயில் இயக்கத்தை தெற்கு ரயில்வே நிர்வாகம் மேற்கொள்ளும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x