Last Updated : 28 Jan, 2024 09:45 AM

26  

Published : 28 Jan 2024 09:45 AM
Last Updated : 28 Jan 2024 09:45 AM

பெண் வாக்காளர்களை ‘கவரும்’ திமுக... மக்களவைத் தேர்தலில் பலன் தருமா? - ஒரு விரிவான பார்வை

அதிமுகவிடமிருந்து விலகிய பெண் வாக்காளர்களைத் தங்கள் பக்கம் ஈர்க்கத் திட்டமிட்டது திமுக. அதனால், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு என பல திட்டங்களை அடுத்தடுத்து அறிமுகம் செய்தது. இது மக்களவைத் தேர்தலில் பெண்கள் வாக்குகளை ஈர்க்குமா? திமுகவின் புதிய திட்டங்கள் பலன் தருமா? - இதோ ஒரு விரிவான பார்வை.

தமிழகத்தில் பெண் வாக்காளர்களை அதிகம் ஈர்த்த தலைவர்களுள் முக்கியமானவர் ஜெயலலிதா. அவரின் பெண் ரசிகர்கள் பலரும் கட்சியில் இணைத்து களமாடினர். அவர் கொண்டுவந்த பல்வேறு திட்டங்கள், இதற்கு முன்பு மற்ற தலைவர்கள் யோசிக்காத திட்டங்களாகவும், 100 சதவீதம் பெண்களை மையப்படுத்தியதாகவும் இருந்தன. குறிப்பாக, குடும்பப் பெண்களுக்கு மிக்சி, கிரைண்டர் கொடுத்தது, பள்ளிகளில் நேப்கின் கொண்டு வந்தது என அவர் அறிவித்த திட்டங்கள் பெண்கள் நலனின் கவனம் ஈர்த்தன.

எனவே, தமிழகத்தில் கடந்த 25 ஆண்டுகளாகப் பெண்கள் வாக்கு வங்கி அதிகம் கொண்ட ஒரே தலைவராக வலம் வந்தவர் ஜெயலலிதா. அவர் கடந்த 2016-ம் ஆண்டு காலமான பின், பெண் வாக்காளர்களுக்கென சிறப்பு திட்டங்கள் எதையும் கொண்டு வராத்தால் பெண்களின் வாக்கை அதிமுக தலைமைத் தக்கவைத்துக் கொள்ள தவறிவிட்டது. இந்த நிலையில், கடந்த சட்டசபைத் தேர்தலில் வென்று ஆட்சி அமைத்த திமுக, அதிமுகவிடமிருந்து விலகிய பெண் வாக்காளர்களைத் தங்கள் பக்கம் ஈர்க்கத் திட்டமிட்டது. அதன் முதல்படியாக, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு என பல திட்டங்களை அடுத்தடுத்து அறிமுகம் செய்தது.

முதல் கையெழுத்தே பெண்களுக்கானது! - குறிப்பாக, முதல்வர் ஸ்டாலின் அரியணையில் அமர்ந்ததும் இட்ட 5 கையெழுத்துகளில் ஒன்று, ’அனைத்துப் பெண்களுக்கும் அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம்’ என்னும் திட்டத்துக்கானதுதான். ஆனால், ‘வெறும் கையெழுத்துதானே போடப்பட்டுள்ளது; திட்டம் நடைமுறைக்கு வர ஆண்டுகள் பல ஆகும்’ என எதிர்க்கட்சியினரால் விமர்சிக்கப்பட்டது. ஆனால், அடுத்த சில நாட்களிலேயே, ’பெண்களுக்கு இலவசம்’ என அரசுப் பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு, திட்டம் செயல்பாட்டுக்கும் வந்தது.

ஓராண்டு நிறைவில், திட்டம் ஏற்படுத்திய தாக்கத்தைக் குறித்துத் திட்டக்குழு ஆய்வு மேற்கொண்டது. அதில், மகளிர் இலவசப் பேருந்து பயணத்திட்டம் மூலம் பயணிக்கக் கூடிய பெண்களில் 48% பெண்கள் குடும்பத்தாரை சார்ந்து இல்லாமல் சுயமாக வேலைக்குச் செல்பவர்கள் என்றும், 52% பெண்கள் 40 வயதிற்கு உட்பட்டவர்கள். இந்தத் திட்டத்தின் வாயிலாக, பெண்கள் மாதம் ரூ.888 சேமிப்பதாகவும் தெரியவந்தது. தோராயமாக, 47 லட்சம் பெண்கள் தினமும் இலவச சேவையைப் பெறுகின்றனர் (அமைச்சர் சொன்ன தரவு). இந்தத் திட்டத்தால் பயனடையும் பெண்கள், வயது அடிப்படையில் 18-ல் இருந்து தொடங்குகிறது.

உள்ளாட்சியில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு! - 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடர்ச்சியாக நடைபெற்று வந்த உள்ளாட்சித் தேர்தல் 2016-ஆம் ஆண்டில் நீதிமன்ற உத்தரவால் பாதியில் நின்றது. அதன்பின், 2019-ல் சில மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பின், 2021-ல் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் 2022 பிப்ரவரியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தினார். இந்தத் தேர்தலில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு தரப்பட்டது. இதில், மொத்தமுள்ள 12,800-க்கும் மேற்பட்ட பதவிகளுக்கான தேர்தல்களில் 50% இடஒதுக்கீட்டால் 6,500 பெண்கள் மன்றங்களில் உறுப்பினர்களாக வெற்றி பெற்றனர். அதேபோல், 21 மாநகராட்சிகளில் சென்னை உள்பட 11 மாநகராட்சிகளில் இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு மேயர் பதவிகளில் பெண்கள் நியமிக்கப்பட்டனர். இதனால், அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது.

புதுமைப் பெண் திட்டம்! - 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து, தமிழகத்தில் மேல்படிப்பு, தொழில்நுட்பப் படிப்புப் பயில எண்ணும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்குவதே இந்தப் புதுமைப் பெண் திட்டம். இது கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. பெண்கள் உயர் கல்வியில் இடைநிற்றலைத் தவிர்க்கும் வகையில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில், திட்டம் தொடங்கப்பட்ட ஓராண்டில் 2,02,824 மாணவிகள் பயனடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2 முதல் 8 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சுமார் 14,758 மாணவிகள் பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளதாகத் தரவுகள் வெளியானது.இதனால் தற்போது 18-20 வயதுள்ள மாணவிகள் பயனடைந்துள்ளனர்.

மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்! - திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது முதல், அனைவராலும் எதிர்ப்பார்க்கப்பட்ட முக்கிய திட்டமாக மகளிர் உரிமைத் தொகை திட்டம் இருநதது. அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஆட்சி பொறுப்புக்கு வந்த இரண்டு ஆண்டுகள் கடந்த பின், 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இதில் மாதந்தோறும் பயனடையும் பெண்கள் எண்ணிக்கை 1 கோடியே 13 லட்சத்து 85 ஆயிரம். இந்தத் திட்டத்தால் 21 வயது நிரம்பிய பெண்கள் பயனடைகின்றனர்.

மாநில மகளிர் கொள்கை! - ஜனவரி 23-ம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்திலும் மாநில மகளிர் கொள்கைக்கு அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 2001-ம் ஆண்டு ஒன்றிய அரசு மகளிர் கொள்கை கொண்டு வந்துள்ளது. தற்போது 23 ஆண்டுகளுக்கு பின்னர் மாநில மகளிர் கொள்கைத் திட்டம் தமிழகத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், பெண்களுக்கான வேலை வாய்ப்பை அதிகரித்தல், பெண்களுக்கான தற்காப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் அளித்தல், கல்வி, சுகாதாரத் திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி போன்றவை எளிதில் பெண்களுக்குக் கிடைக்கச் செய்தல் என, பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

திமுக குறிவைக்கும் மகளிர் வாக்கு கிடைக்குமா? - தமிழகத்தில் இறுதி செய்யப்பட்ட வாக்காளர்கள் பட்டியலைக் கடந்த 22-ம் தேதி தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தமிழகத்தில் மொத்தமாக 6.19 கோடி வாக்காளர்கள் இருக்கின்றனர். அதில் 3 கோடியே 14 லட்சத்து 85 ஆயிரத்து 724 பெண் வாக்காளர்கள் இருக்கின்றனர். ஆண்களைவிட பெண் வாக்காளர் எண்ணிக்கை 10 லட்சத்துக்கும் மேல் அதிகம். இதில் புதிதாக சேர்க்கப்பட்ட பெண் வாக்காளர்கள் 2 லட்சத்து 50 ஆயிரம்.எனவே, திமுகவின் பெண்களுக்கான திட்டங்கள், அவர்களுக்கு பெண்களின் வாக்குகளை அதிகரிக்கும் என கணிக்கப்படுகிறது.

இது குறித்து சமூகநலன் மற்றும் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவனிடம் பேசியபோது, “விடியல் பயணம் தொடங்கி, புதுமைப் பெண் திட்டம் , குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை என சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, வரும் தேர்தலில் மட்டுமல்ல, இனி வரும் அனைத்து தேர்தலிலும் பெண்கள் ஆதரவு திமுக கட்சிக்குத் தான்” என்றார்.


திமுக - பெண்களுக்கு ஏன் முக்கியத்துவம் தருகிறது? - ‘திமுக’ என்னும் கட்சிப் பெண்களுக்கு எதிரான கட்சி என்னும் பிம்பம்தான் மக்களிடையே, குறிப்பாக பெண்களிடையே இருந்தது. அதற்கான காரணத்தை சில ஆண்டுகள் பின்னோக்கி பார்க்க வேண்டும். கடந்த 1989-ம் ஆண்டு திமுக ஆளுங்கட்சியாக இருந்தபோது, சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதாவின் சேலையை இழுத்து அவமதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ‘திமுக பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத கட்சி’ என விமர்சனத்துக்கு உள்ளானது. அந்த விமர்சனம், திமுகவை விட்டு நீங்கியபாடில்லை.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், திமுகவின் உறுப்பினர்கள், மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டது தொடர்பாகக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘1989-ம் ஆண்டு தமிழக சட்டசபையில் ஜெயலலிதா சேலை இழுக்கப்பட்டதையும் அதைப் பார்த்து திமுக சிரித்ததையும் மறந்துவிடாதீர்கள்’ எனப் பேசினார்.
இப்படியாக, திமுக ’பெண்களுக்குப் பாதுகாப்பிலாத கட்சி’ என்னும் கறை அழுத்தமாகவே படிந்துவிட்டது.

அதேபோல், ஜெயலலிதா என்னும் பெண் தலைவர் 25 ஆண்டுகள் தமிழகத்தில் நிலைத்து நின்றதால் அதிமுக ’பெண்களுக்கான கட்சி’ என்னும் பெயரைத் தனதாக்கிக்கொண்டது. அதனால், மக்கள் மனநிலையை மாற்ற திமுக முயற்சித்து வருகிறது. அதனால் காலம் கடந்து நிலைத்திருக்கும் திட்டங்களைத் திமுக பெண்களுக்காக உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. இதனால், புதிய பெண் வாக்காளர்கள் மத்தியில் திமுக மீது நன்மதிப்பீடு ஏற்பட்டுள்ளது என சொல்லப்படுகிறது.

குறிப்பாக, பெண்கள் மத்தியில் கடந்து ஈராண்டுகளாக மாற்றுப் பார்வை உருவாகி வருகிறது. ஒரு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டால், அந்தத் திட்டத்தின் பயன்பாட்டின் அளவு என்ன? எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பது அவசியம். அந்த வகையில், தினந்தோறும் மக்கள் பயன்படுத்தி உணரும் வகையில் திமுகவின் திட்டங்கள் உள்ளது. இதனை ஓட்டு அரசியலாக மட்டும் பார்க்க வேண்டிய தேவையில்லை. சமூக நலம் சார்ந்தது என்பதையும் தவிர்க்கவியலாது. ஆகவே, பெண்கள் மத்தியில் திமுக நல்ல ’ஸ்கோர்’ செய்திருக்கிறது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

எனினும், ‘அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை கொடுக்கப்படும்’ எனத் தேர்தல் வாக்குறுதியில் கூறிவிட்டு, தகுதி அடிப்படையில் எண்ணிக்கையைக் குறைத்தது திமுக. அந்தத் தகுதிகள் இருந்தும் பல ஏழைப் பெண்களுக்குத் திட்டத்தில் இடமில்லாமல் போனதாகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

அதுமட்டுமில்லாமல், இலவசப் பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் பெண்களை, ‘ஓசியில் பஸ்சில் பயணிப்பதாக திமுகவின் மூத்தத் தலைவர்களுள் ஒருவராக இருக்கும் அமைச்சர் பொன்முடி மேடையில் பேசியதும் சர்ச்சையானது. மேலும், பல்லாவரம் திமுக எம்எல்ஏ வீட்டில் இளம்பெண் சித்ரவதைக்கு உள்ளானது என பெண்கள் நலனில் திமுக சறுக்கலையும் சந்தித்துள்ளது.

‘தேர்தலைப் பொறுத்தவரைப் பெண்கள் வாக்குகளைக் கவர கட்சிகள் பல வியூகங்கள் வகுக்கின்றன. அதில் திமுக சற்று முன்னேறி இருப்பதாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், உறுதியாக இது தேர்தலில் பிரதிபலிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x