Published : 28 Jan 2024 05:05 AM
Last Updated : 28 Jan 2024 05:05 AM
சென்னை: தமிழகத்துக்கு புதிய முதலீடுகளை ஈர்க்க அரசு முறை பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஸ்பெயின் புறப்பட்டுச் சென்றார்.
தமிழகத்தை, 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளதார மாநிலமாக உயர்த்தும் வகையில், ஜனவரி முதல் வாரத்தில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மொத்தம் ரூ.6,64,180 கோடிக்கான 631 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
முதலீட்டாளர்கள் மாநாடு முடிந்தவுடன், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஸ்பெயின் நாட்டுக்கு செல்ல உள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியிருந்தார். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு அரசு முறை பயணமாக வெளிநாடு புறப்பட்டார். அவர் ஸ்பெயின், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் செய்கிறார். சென்னையில் இருந்து விமான நிலையத்தில் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் அவரை வழியனுப்பி வைத்தனர்.
முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை எட்டும் முயற்சியில் 2024-ம் ஆண்டு தொடக்கமே உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் வெற்றியாக அமைந்தது. அதனை தொடர்ந்து 8 நாட்கள் பயணமாக ஸ்பெயின் செல்கிறேன். பிப்ரவரி 7-ம் தேதி காலை சென்னை திரும்புகிறேன். கடந்த 2022-ம் ஆண்டு தொழில் முதலீடுகளை ஈர்க்க ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்றிருந்தேன். அந்த பயணத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய ரூ.6,100 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 2023-ம் ஆண்டு மே மாதம் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சென்றதில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய ரூ.1,342 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு வேகமாக செயல் வடிவம் கொடுத்ததால் பல நிறுவனங்கள் தங்களுடைய தொழிற்சாலைகளை தமிழகத்தில் நிறுவ தொடங்கியுள்ளன. ஜப்பான், சிங்கப்பூரை போலவே ஸ்பெயின் நாட்டிலும் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த இருக்கிறேன். இதில், ஸ்பெயின் நாட்டை சேர்ந்த முதலீட்டாளர்கள், வணிக அமைப்புகள், தொழில்முனைவோர் மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். இந்த மாநாட்டில் தமிழகத்தில் நிலவும் சாதகமான முதலீட்டு சூழல், கட்டமைப்பு, மனிதவளம் போன்ற சிறப்புகளை எடுத்துக்கூறி, இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ள தமிழகம் தான் உகந்த மாநிலம் என்று அந்நாட்டு முதலீட்டாளர்களுக்கு எடுத்துரைக்க இருக்கிறேன். இந்த பயணத்தில் பெரும் நிறுவனங்களுடன் நேரடி பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படவுள்ளது. ஐரோப்பிய நாடுகளின் முதலீடுகளை பெறுவதற்கான அனைத்து முயற்சிகளும் இந்த பயணத்தின்போது எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT