Published : 28 Jan 2024 05:14 AM
Last Updated : 28 Jan 2024 05:14 AM
சென்னை: மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக - காங்கிரஸ் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
மக்களவைத் தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று தமிழ்நாடு காங்கிரஸில் தேசிய அளவில் ப.சிதம்பரம் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, மாநில அளவில் கே.எஸ்.அழகிரி தலைமையில் முன்னாள் மாநிலதலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, எம்.பி.க்கள் உள்ளிட்ட 31 பேர் கொண்ட தேர்தல் குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் ஆகியோருடன் தொகுதி பங்கீடு தொடர்பாக மேலிட பார்வையாளர் அஜோய் குமார் அண்மையில் ஆலோசனை நடத்தி இருந்தார். அதில், குறைந்தது 15 இடங்களையாவது கேட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் நியமித்த தேசிய கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைப்பாளர் முகுல் வாஸ்னிக், முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜோய் குமார், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை ஆகியோர் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் ஆகியோருடன் இன்று பகல் 12 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஆலோசிக்கின்றனர்.
அதனைத் தொடர்ந்து, திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர். அங்கு திமுக தொகுதி பங்கீட்டு குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலான, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், துணை பொதுச்செயலாளர் க.பொன்முடி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா ஆகியோர் கொண்ட குழுவுடன் பேசுகின்றனர்.
காங்கிரஸ் பட்டியலும் திமுக திட்டமும்.. கடந்த தேர்தலில் புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் காங்கிரஸூக்கு ஒதுக்கப்பட்டன. இதில் தேனியை தவிர மற்ற 9 இடங்களில் காங்கிரஸ் வென்றது. இன்றைய பேச்சுவார்த்தைக்கு, புதுச்சேரி உட்பட 12 தொகுதிகள் இடம்பெற்ற பட்டியலுடன் காங்கிரஸ் தலைவர்கள் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. இதில் புதுச்சேரி உட்பட 7 தொகுதிகளை ஒதுக்க திமுக திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT