Published : 06 Feb 2018 03:15 PM
Last Updated : 06 Feb 2018 03:15 PM

இத்தாலிப் பெண்ணை கரம் பிடித்த நாகர்கோவில் இளைஞர்: சுவாரஸ்ய காதல் கதை!

மொத்த வீட்டிலும் மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது. வீட்டுக்குள் நுழைந்ததும், 'வாங்க…வணக்கம்…நல்லா இருக்கீங்களா?' என அழகுத் தமிழில் பேசி, நம்மை வரவேற்று ஆச்சர்யப்படுத்துகிறார் இத்தாலியைச் சேர்ந்த பிளாசியா. நாகர்கோவிலைச் சேர்ந்த சுப்ரமணியும் இத்தாலியைச் சேர்ந்த பிளாசியாவும் காதலித்து, இருவீட்டார் சம்மதத்துடன் நாகர்கோவிலில் இந்திய முறைப்படி கரம் பிடித்தனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு, இத்தம்பதியின் திருமணம் நாகர்கோவிலில் நடந்தது. திருமணத்துக்குப் பின்பு, இப்போது நாகர்கோவில், என்.ஜி.ஓ காலனியில் உள்ள சுப்ரமணியின் வீட்டில் வசிக்கிறார் பிளாசியா.

இந்த தம்பதியைச் சந்திக்கச் சென்ற போதுதான், நம்மைத் தமிழில் பேசி வரவேற்றார் பிளாசியா.

ஒரு காலைப் பொழுதில் இவர்களைச் சந்தித்தோம்.

'வாங்க'….என வரவேற்ற பிளாசியாவைத் தொடர்ந்து, சுப்பிரமணி வணக்கம் சொல்லி வரவேற்றார். 'மாடிக்கு போவமா? அங்கே போட்டோஸ்க்கு நல்ல இடம் இருக்கும்' என்றார் சுப்பிரமணி.

மொட்டைமாடிக்குச் செல்கையில், சுப்ரமணி வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணி நாய் ஒன்று படுத்துக் கிடந்தது. பிளாசியாவைப் பார்த்ததும், அந்த நாய் வாலாட்ட... அதன் அருகில் அமர்ந்து வாஞ்சையோடு தலையைத் தடவுகிறார் பிளாசியா.

''பிளாசியா என் வீட்டுக்கு வந்தே முழுசா இரண்டு நாளுதான் ஆகுது. எங்க வீட்டுச் செல்லத்துக்கிட்ட கூட எவ்ளோ அந்நியோன்யம் ஆகிட்டா பாருங்க! இப்போ புரியுதா என்னை எது காதலிக்க வைச்சதுன்னு….'' எனக் கேட்டு ஆச்சர்யப்படுத்தினார்.

சுப்ரமணி இதுகுறித்து கூறுகையில், ''இப்போ சீனாவில் ஒரு எலக்ட்ரானிக் கார் கம்பெனியில் திட்ட மேலாளராக இருக்கேன். பேட்டரி கார் தயாரிக்கும் நிறுவனம் அது. இதுக்கு முன்ன, அமெரிக்காவில் வேலை செஞ்சேன். அதே நாட்டுல தான் பிளாசியாவும் இன்னொரு நிறுவனத்தில் வேலை செஞ்சாங்க. அங்க, நாங்க சில நண்பர்கள் சேர்ந்து ஒரு குழுவா சுத்துவோம். அதாவது வார விடுமுறைகளில் ரிலாக்ஸா சுத்துவோம். நிறைய பயணம் செய்வோம். வாழ்க்கையை, மனிதர்களை பயணத்தின் மூலமா கத்துக்குவோம். அப்படி அந்தக் குழுவில்தான் பிளாசியாவை முதலில் சந்திச்சேன்.

நான் கொஞ்சம் கோபக்காரன். எனக்கு நேர் எதிர் பிளாசியா. அவ்வளவு பேரன்பை சுமந்து திரிபவள். ஆனால் எங்களுக்குள் கருத்தியல் ரீதியா நிறைய விஷயம் ஒத்துப் போச்சு. விட்டுக் கொடுத்துப் போற தன்மை, பாசம் காட்டும் பாங்குன்னு பிளாசியாவோட நல்ல விஷயங்கள், என்னை நிறையவே இம்ப்ரஸ் பண்ணுச்சு. ஆனாலும் அதை மனசுக்குள்ளேயே வைச்சுருந்தேன். ஆனா பிளாசியாவே ஒரு நாள்... காதலைச் சொன்னாங்க. உடனே இரண்டு வீட்டுலயும், சம்மதிச்சாத்தான் கல்யாணம்ன்னு சொன்னேன். இரண்டு வீட்டுலயும் பேசினோம்.

என் அப்பா ஐயப்பன் பிள்ளை, ஆட்சியரின் நேர்முக உதவியாளரா இருந்து ஓய்வு பெற்றவர், அம்மா லெட்சுமி, சார் ஆட்சியரா இருந்து ஓய்வு பெற்றவங்க. எனக்கு ஒரு அண்ணன், தங்கச்சி இருக்காங்க. அவுங்க இரண்டு பேருக்கும் திருமணம் முடிஞ்சுருச்சு.

காதலைச் சொன்னதும், ஒண்ணே ஒண்ணு தான் சொன்னாங்க, 'வாழப் போற உங்க ரெண்டு பேருக்கும் இஷ்டம்னா, எங்களுக்கும் சம்மதம்'னு. இதே மாதிரி பிளாசியா வீட்டுலயும் ஒத்துக்கிட்டாங்க. அப்புறம் என்ன நல்ல நாள் பாத்து, சொந்தங்களை கூப்பிட்டு, நாகர்கோவிலில் மண்டபம் பிடிச்சு கல்யாணம் பண்ணியாச்சு என்கிறார் சுப்ரமணி.

பிளாசியா கை, கால்களில் மருதாணி வைத்து, காலில் மெட்டி அணிந்து அக்மார்க் தமிழ்ப் பெண்ணாகவே மாறியிருந்தார்.

அவரிடம் பேசினோம். ''கொஞ்சம், கொஞ்சம் தமிழ் கத்துக்கிட்டு இருக்கேன். இங்க நாஞ்சில் நாட்டு கல்யாணத்துலயே ஆயிரம் விஷயம் இருந்துச்சு. தாலி கட்டுனது மட்டும் இல்லை. சாயங்காலம் தலையில் பப்படம் உடைக்குறது, நலங்கு உருட்டுறதுன்னு நிறைய சடங்கு இருந்துச்சு.

அப்புறம் ஒரு குடத்தில் தண்ணீர் நிரப்பி, அதில் ஒரு மோதிரத்தை போட்டு எங்களை எடுக்கச் சொன்னாங்க. அடுத்த நாளு பொம்மை மாத்துறதும் நடந்துச்சு. இப்படி நிறைய புதுசா பார்த்தேன். ஆனா இதெல்லாம் கணவன், மனைவி கூச்சத்தை போக்குவதற்கு நாஞ்சில் நாட்டில் விளையாடும் விளையாட்டுன்னு சொன்னாங்க. இதையெல்லாம் பத்தி, நிறைய கல்யாண வீடியோ போட்டுக் காட்டுனாங்க. அப்புறம் 11 வகை கூட்டு, பொரியலோட நாஞ்சில் நாட்டுக் கல்யாண சாப்பாடும் ரொம்ப ருசியா இருந்துச்சு. இந்திய கலாச்சாரத்தை கத்துகிட்டு இருக்கேன். இது ரொம்பப் பிடிச்சுருக்கு'' என்றார்.

11-ம் தேதி இந்த ஜோடி, பணி நிமித்தமாக மீண்டும் சீனாவுக்குப் பயணிக்கிறது. விடைபெறும் போது, பிளாசியா கொஞ்சு தமிழில் சொன்னார்... 'நன்றி, வணக்கம்' என்று!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x