Published : 28 Jan 2024 04:12 AM
Last Updated : 28 Jan 2024 04:12 AM
மக்களவைத் தேர்தல் நெருங்கும் சூழலில் புதுச்சேரியில் போட்டியிடுவதில் இண்டியா கூட்டணிக்குள் சலசலப்பு அதிகளவில் எழுந்துள்ளது. அதேபோல் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் அதிருப்தியால் பாஜக மேலிடம் கவலையில் உள்ளது.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறும்; இதற்கான அறிவிப்பு பிப்ரவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன. புதுச்சேரியில் கடந்த 2019-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் - திமுக ஆட்சி புதுச்சேரியில் நடந்து வந்தது. அப்போது ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியானது தேர்தலை எளிதில் எதிர்கொண்டது. அந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வென்று வைத்திலிங்கம் எம்.பியானார்.
அதையடுத்து நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. அக்கட்சியில் இருந்து முன்னதாகவே பலரும் பாஜகவுக்கும், என்.ஆர்.காங்கிரஸுக்கும் இடம்பெயர்ந்தனர். அதுவும் சட்டப்பேரவைத் தேர்தலின் தோல்விக்கு ஓர் காரணமானது. தற்போது புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது. புதுச்சேரியில் தற்போது பாஜக - காங்கிரஸ் இரு கட்சிகளிலும் உள்ள மாநிலத் தலைவர்கள் எம்.பிக்களாக உள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் மக்களவை உறுப்பினராக உள்ளார். பாஜக மாநிலத் தலைவர் செல்வகணபதி மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். மாநிலத் தலைவர்கள் இருவரும் ஏற்கெனவே எம்.பி.க்களாக உள்ள நிலையில், போட்டி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவும், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் இழந்த செல்வாக்கை மக்களவையில் நிரூபிக்க முயல்கிறது. காங்கிரஸும் முனைப்பாக இருந்து வருகிறது.
இண்டியா கூட்டணியில் விரிசல்: புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட திட்டமிட்டு முனைப்புடன் செயல்பட தொடங்கிய நிலையில், இத்தேர்தலில் போட்டியிட எதிர்க்கட்சியான திமுகவும் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளது. இவர்கள் இடையேயான விரிசலுக்கு, அண்மையில் நடந்த பொங்கல் விழாவும் தொடக்கப் புள்ளியானது.
அண்மையில் காங்கிரஸ் சார்பில் நடந்த நல்லிணக்க பொங்கல் விழாவில், திமுகவை எதிர்த்து போட்டியிட்டு வென்ற சுயேச்சை எம்எல்ஏவை காங்கிரஸ் அழைத்தது. இது, திமுகவினரை கடும் கோபத்துக்குள்ளாகியுள்ளது. இதையடுத்து நடந்த கட்சிக்கூட்டத்தில் திமுகவில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதை வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக அதிருப்தியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து நடந்த பொதுக் கூட்டத்திலும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதை பற்றி திமுக வெளிப் படையாகவும் பேசத் தொடங்கியுள்ளது.
“இது பற்றி எனக்கு தெரியாது - கட்சித் தலைமை சொல்லும் முடிவுக்கு கட்டுப்படுவோம்” என்று காங்கிரஸ் மாநிலத்தலைவர் வைத்திலிங்கம் கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்து விட்டு, “யாரும் திமுகவை விமர்சிக்கக் கூடாது” என்று உத்தரவிட்டுள்ளார். இண்டியா கூட்டணியில் எழுந்துள்ள சலசலப்பு வெற்றியை பாதிக்கும் என்பதால் காங்கிரஸார் தொடர் மவுனம் காக்கின்றனர். இதற்கிடையே திமுக போட்டியிட விரும்புவதாக, தங்களது விருப்பத்தை அக்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.
பாஜக எம்எல்ஏக்கள் அதிருப்தி: புதுவையில் ஆளும்கட்சியான என்ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணியில், பாஜக வேட்பாளர் களம் இறங்குவது உறுதியாகியுள்ளது. பாஜக சார்பில் தேர்தல் ஆயத்த பணிக்காக பல்வேறு கூட்டங்களை நடத்தி வருகின்றனர். புதுச்சேரியில் ஆட்சி அமைந்து மூன்று ஆண்டுகளாகியும் வாரியத்தலைவர் பதவிகளை தங்களுக்கு தரவில்லை என்று வெளிப்படையாக தங்கள் அதிருப்தியை பாஜக மற்றும் ஆதரவு சுயேச்சைகள் கட்சி மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவிடம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக வாரியத் தலைவர் பதவிகளை முதல்வர் ரங்கசாமி ஒதுக்காதது, பாஜக எம்எல்ஏக்கள் தொகுதிகள் புறக்கணிப்பு, மது தொழிற்சாலை அனுமதி விவகாரம், பேரவை வாயிலில் போராட்டம் என பல விஷயங்களை குறிப்பிட்டனர். பாஜகவுக்கு 6 எம்எல்ஏக்கள், ஆதரவு சுயேச்சைகள் 3 பேர், நியமன எம்எல்ஏக்கள் 3 பேர் எனமொத்தம் 12 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது.அத்துடன் என்.ஆர்.காங்கிரஸுக்கு 10 எம்எல்ஏக்களும், 3 சுயேச்சைகள் ஆதரவும் உள்ளது.
இது பற்றி கட்சி வட்டாரங்கள் கூறுகையில், புதுச்சேரியில் நான்கு பிராந்தியங்கள்உள்ளன. மொத்தம் 30 தொகுதிகளிலும் எம்எல்ஏக்களாக உள்ளோரும், அதற்கு போட்டியிட தயாராக இருப்போரும் தான் தங்கள் தொகுதிகளில் வாக்குகளை பெற்றுத்தர வேண்டும். தற்போது பாஜக போட்டியிட திட்டமிட்டு பணிகளை முன்கூட்டியே தொடங்கியிருக்கிறது. இதில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் மக்களவைத் தேர்தலில் வெல்ல முடியும். கடந்த முறை கூட்டணியில் இருந்த அதிமுகவும் தற்போது வெளியேறியுள்ளது.
இதற்கிடையே என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணியில் எம்எல்ஏ-க்கள் தரப்பில் உள்ள அதிருப்தி கூட்டணிக்குள் சிறு விரிசலை உருவாக்கியுள்ளது. மாநில புதியத் தலைவர் மீதான அதிருப்தியில் கட்சி நிர்வாகிகள் ராஜினாமா செய்வதும் பாஜகவில் ஏற்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலை எதிர்நோக்கும் சூழலில், இவை அனைத்தையும் சமாளிக்க வேண்டிய கட்டாயமும் கவலையும் பாஜக மேலிடத்துக்கு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT