Published : 28 Jan 2024 04:12 AM
Last Updated : 28 Jan 2024 04:12 AM
விருத்தாசலம்: ‘அடித்தட்டு மக்களின் அதிகார மையம்’ எனக் கருதப்படும் கிராம சபைக் கூட்டம் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15 மற்றும் அக்டோபர் 2 என ஆண்டுக்கு 4 முறை நடத்தப்பட்டு வந்தது. தற்போது உலக தண்ணீர் தினமான மார்ச் 22, உள்ளாட்சித் தினமான நவம்பர் 1 ஆகிய நாட்களுக்கும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதால், ஆண்டுக்கு 6 முறை கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு ஊராட்சியிலும் அதன் தலைவரால் கூட்டப்படும் இக்கூட்டத்தில் கிராம தேவைகள், நிறைவேற்றப்பட்ட பணி தொடர்பான திட்ட அறிக்கையை அரசு அதிகாரி முன்னிலையில் பொது மக்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பதே இதன் சாராம்சம். ஊராட்சி மன்றத்துடன் கலந்தாலோசித்து கிராம சபைக்கான கூட்டப் பொருளை தயார் செய்து குறைந்த பட்சம் 7 நாட்களுக்கு முன்பாக கூட்டம் குறித்த அறிக்கையை ஊராட்சி மன்றத் தலைவர் வெளியிட்டு, ஊராட்சிக்கு சொந்தமான பொது இடங்களில் சுழற்சி முறையில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு நடத்தப்படும் கிராம சபைக் கூட்டங்களில் ஜன-26 மற்றும் அக்.2 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் கிராம சபைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் ஜன. 26-ல் நடைபெறும் கூட்டத்தில் ஊராட்சி வளர்ச்சித் திட்டங்கள், பயனாளிகள் தேர்வு குறித்த விவரங்கள் ஒப்புதல் பெறுதல், குடிநீர் தேவை, தூய்மைப் பணி குறித்து விவாதிக்கப்படும். இதேபோன்று அக். 2-ல் நடைபெறும் கூட்டத்தில் வரவு செலவு தணிக்கை அறிக்கைகள் சரிபார்ப்புகள் மேற்கொள்ளப்படும்.
கிராம சபைக் கூட்டம் நடத்தப்படும் போது தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் 32 துறைசார் அலுவலர்கள் பங்கேற்க வேண்டும். ஆனால் மாவட்ட ஆட்சியர் பங்கேற்கும் கூட்டத்தில் மட்டுமே 32 துறைசார் அலுவலர்களும் பங்கேற்கின்றனர். இதர கிராம சபைக் கூட்டங்களில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் அல்லது கல்வித் துறை அலுவலர் மட்டுமே பெயரளவுக்கு பங்கேற்கின்றனர். வார்டு உறுப்பினர்களில் சிலரும் கூட்டத்துக்கு வருவது கிடையாது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்களை கட்டாயப்படுத்தி அழைத்து வந்து அமரச் செய்து, பெயரளவுக்கு தீர்மான புத்தகத்தை வாசித்து, தங்களுக்கு சாதகமாக கணக்கெழுதி, எழுதப் படிக்கத் தெரியாத பாமர மக்களிடம் கையெழுத்து பெறுவது தான் இதுவரை நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களின் நிதர்சன நிலை. விருத்தாசலம் வட்டாரம் சத்தியவாடி ஊராட்சியில் நேற்று முன்தினம் நடந்த கிராம சபைக் கூட்டத்துக்கு தலைவர் தவிர மற்ற 9 வார்டு உறுப்பினர்களில் ஒருவர் கூட பங்கேற்கவில்லை.
ஓய்வு பெற்ற ஊராட்சி செயலர் ஒருவரைக் கொண்டு பெயரளவுக்கு தீர்மானம் வாசிக்கப்பட்டது. அப்போது சில இளைஞர்கள், ஊராட்சியில் நிலவும் குறைபாடுகள் குறித்து தலைவர் வேல்முருகனிடம் முறையிட்டபோது, வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் கோரிக்கைகள் தொடர்பாக மனு கொடுங்கள் எனக் கூறிவிட்டு, அங்கிருந்து ஊராட்சித் தலைவர் புறப்பட்டுச் சென்றார். இது போன்று மங்களூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கல்லூர் கிராமத்தில் குடிநீர் தெருவிளக்கு வசதி செய்து தரப்படவில்லை எனக் கூறி ஒரு பகுதி மக்கள் கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்தனர்.
கோடங்குடி ஊராட்சியிலும் பொதுப் பயன்பாட்டு இடத்தை பட்டா வழங்குவதில் இரு சமூகத்தினருக்கு இடையேயான பிரச்சினையால் அங்கும் ஒரு பிரிவினர் கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்தனர். இதேபோல் பல்வேறு இடங்களில் கிராம சபைக் கூட்ட புறக்கணிப்புகள் நடைபெற்றுள்ளன. இதைத்தாண்டி முறையாக நடத்தப்பட்டதாக காட்டப்படும் கூட்டங்களிலும், அந்தக் கிராமங்களைச் சேர்ந்த பெரும் பான்மையான மக்கள் பங்கேற்பதில்லை. அப்படியே பங்கேற்றாலும், அவர்கள், ‘கூட்டத்துக்கு வந்து கேள்வி எதுவும் கேட்கக் கூடாது’ என்ற நிபந்தனையோடு தான் அழைக்கப் படுகின்றனர்.
அதையும் மீறி சிலர் கேள்வி எழுப்பினால், அவர்கள் மீது தனிப்பட்ட பகையாக மாறி விடுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட துணை தலைவர் ஆகியோரின் மோசடிகளை ஆராய அனுப்பி வைக்கப்படும் அரசு சார் அலுவலர்களோ, தலைவரின் உபசரிப்போடு அங்கிருந்து கிளம்பி விடுவதும் தொடர்கிறது. கிராம சபைக் கூட்டங்களில் இயற்றப்படும் தீர்மானங்களுக்கு எந்த ஒரு மாவட்டத்திலும் அதற்கென முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதா என்பது கேள்விக்குறியே.
அண்மையில் ஒரு கிராம சபைக் கூட்டத்தில் இயற்றப்பட்டத் தீர்மானத்தின் அடிப்படையில் உயர் நீதிமன்றம் டாஸ்மாக் கடை திறக்க தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. இது போன்ற சில நற்செயல்கள் நிகழும் நிலையில், இதை அனைத்துப் பகுதி மக்களும் அறிந்து அதற்கேற்ப கிராம சபைக் கூட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்வார்களேயானால் வெற்றுச் சம்பிரதாயமாக நடைபெறும் இந்த கிராமசபைக் கூட்டங்கள் சாதனை நிகழ்த்தும் சபையாக மாறும் என்பதில் ஐயமில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT