Published : 27 Jan 2024 08:38 PM
Last Updated : 27 Jan 2024 08:38 PM
திருநெல்வேலி: “நடிகர் விஜய் கட்சி தொடங்குவது ஓர் ஆரோக்கியமான அரசியலாக இருக்கும்” என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
பாளையங்கோட்டையில் நடைபெற்ற திருநெல்வேலி, தென்காசியில் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: காவிரி, கச்சத்தீவு, மீத்தேன் உள்ளிட்ட எதை பற்றியும் பாஜகவுக்கு கவலை இல்லை. என் மண் கொள்ளை அடிக்கப்படுகிறது. அதை கொள்ளை அடிப்பது திராவிடம். அதை தடுக்காமல் இருக்கிறது பாஜக. தமிழகத்திற்கு 10 ஆண்டுகளில் ஏதாவது ஒரு நன்மை நடந்துள்ளது என்பதை பாஜக சொல்லட்டும்.
இந்திய பொருளாதாரம் சீரழிந்துள்ளது. திமுக பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சியாக இருந்தபோது இந்தி தெரியாது போடா என்றும் ஆளுங்கட்சி ஆனவுடன் இந்தி தெரியும் வாடா என தெரிவிப்பதுதான் திமுகவின் கொள்கை. தற்போது கேலோ விளையாட்டு போட்டிக்குகூட தமிழில் பெயர் வைக்க முடியாமல்தான் திமுக உள்ளது. மோடி இதுவரை எந்த மாநில விளையாட்டு துறை அமைச்சரையும் சந்திக்கவில்லை. ஆனால் தமிழகத்தில் உள்ள விளையாட்டு துறை அமைச்சரை மட்டும் சந்தித்துள்ளார். இருவருக்கும் இடையே ஒரு நல்ல உறவு இருப்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவது ஓர் ஆரோக்கியமான அரசியலாக இருக்கும். அண்ணன்(சீமான்) மட்டும்தான் தமிழகத்தில் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார் அவருக்கு உறுதுணையாக இருப்போம் என அவர் நினைத்திருப்பார். தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட எந்த தீய திட்டத்திற்கும் நேரடியாக சென்று பார்த்தால் அதில் கருணாநிதி பெயர் இருக்கும். அநாகரிக அரசியலின் ஆரம்ப புள்ளியே அதுதான்.
நீட் தேர்வு விலக்கு தொடர்பாக 50 லட்சம் கையெழுத்தை மாநாட்டில் கண்காட்சியாக வைத்துள்ளார்கள். இந்த கையெழுத்தை குடியரசு தலைவர், பிரதமரிடம் கொடுத்திருக்கலாம். ஆனால் வழங்கப்படவில்லை. விளையாட்டு துறை நிகழ்ச்சிக்கு அழைக்கும்போது கூட அவரிடம் வழங்கி இருக்கலாம். அப்போதும் வழங்கப்படவில்லை. நீட் தேர்வுக்கு ஒரு முடிவு சொல்லுங்கள் என்று ஏன் பாரத பிரதமரிடம் விளையாட்டுத்துறை அமைச்சர் கேட்கவில்லை. பொழுதுபோக்குக்காக திமுக கையெழுத்து வாங்கி வைத்துள்ளார்கள். மாநாட்டில் காண்பிப்பது மட்டும்தான் அவர்கள் வேலை. நீட் தேர்வுக்கு விலக்கு வழங்கப்பட மாட்டாது என்பது உலக மக்கள் அனைவருக்கும் தெரியும். இது ஏமாற்று வேலை. மக்களை ஏமாற்றுவது தான் திமுகவின் வேலையாக உள்ளது. மக்களவை தேர்தலில் நான் போட்டியிடவில்லை. சட்டப் பேரவை தேர்தலில்தான் போட்டியிடுவேன். இவ்வாறு சீமான் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT