Published : 27 Jan 2024 07:24 AM
Last Updated : 27 Jan 2024 07:24 AM
சென்னை: அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய தரவுகளைப் பெறுவதற்காக பிப்.5 முதல் 10-ம் தேதி வரை மண்டல வாரியாக பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட உள்ளன. இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை:
மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் நலனை முன்னிலைப்படுத்துவதும், இந்திய சமூக அரசியல் முன்னேற்றத்துக்கு ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்குவதுமான ஒரு தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் வகையில், அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் தமிழகம் முழுவதும் வரும் பிப்.5-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை மண்டல வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு, பல்வேறு தரப்பு மக்களைச் சந்தித்து தரவுகளை சேகரித்து, சிறந்த தேர்தல் அறிக்கை தயார் செய்ய உள்ளனர்.
அதன்படி, பிப். 5-ம் தேதி காலை 9 மணிக்கு சென்னை மண்டலத்திலும் (சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு), மாலை 5மணிக்கு வேலூர் மண்டலத்திலும்(வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை) 6-ம்தேதி காலை 10.30 மணிக்கு விழுப்புரம் மண்டலத்திலும் (விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி), மாலை 5மணிக்கு சேலம் மண்டலத்திலும்(சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி), 7-ம் தேதி காலை 10மணிக்கு தஞ்சாவூர் மண்டலத்திலும் (தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை), மாலை 5 மணிக்கு திருச்சி மண்டலத்திலும் (திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை) பொதுமக்களை சந்தித்து கருத்து கேட்கின்றனர்.
அதேபோல, பிப்.8-ம் தேதி மாலை 4 மணிக்கு கோவை மண்டலத்திலும் (கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி), 9-ம் தேதி மாலை 4 மணிக்கு மதுரை மண்டலத்திலும் (மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம்), 10-ம் தேதி காலை 10மணிக்கு திருநெல்வேலி மண்டலத்திலும் (நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி) கருத்து கேட்புக் கூட்டம் நடைபெறும்.
தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினர் வரும்போது, மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்ட செயலாளர்களும், நிர்வாகிகளும், அந்தந்த மாவட்டங்களில் உள்ள விவசாயிகள், தொழிலாளர்கள், மகளிர், மாணவர் உள்ளிட்டஅனைத்து தரப்பினரையும், அவர்களின் தேவைகள், எதிர்பார்ப்புஎவை என்று, நேரடியாக அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்துவந்தோ அல்லது அவர்களிடம்தரவுகளைப் பெற்று வந்தோ குழுவினரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT