Published : 27 Jan 2024 06:10 AM
Last Updated : 27 Jan 2024 06:10 AM
கோவை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது என, கோவையில் அதிமுக சார்பில் நடந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டினார்.
அதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட மாணவரணி சார்பில், செல்வபுரம் சிவாலயா மண்டபம் அருகே வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. மாணவரணி மாவட்ட செயலாளர் டி.ஜேம்ஸ்ராஜா தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தசாமி எம்எல்ஏ உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி பேசியதாவது: இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து 1965 ஜனவரி 25-ம் தேதி தமிழகத்தில் தொடங்கப்பட்ட போராட்டம் உலகம் கண்டிராத ஒரு மாபெரும் புரட்சியாகும். 1938 முதல் 1965 வரை பல்வேறு காலகட்டங்களில் ஆதிக்க இந்தி மொழி திணிப்பு தமிழ்நாட்டில் நுழைந்த போதெல்லாம் இந்தியை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இந்த மொழிப்போர் போராட்டத்தில் பலர் வீரமரணம் அடைந்தனர்.
திமுக இந்தி எதிர்ப்பு போராட்டத்தை முன்னின்று நடத்தி 1967-ல் அண்ணா தலைமையில் ஆட்சியை பிடித்தது. அண்ணாவின் மறைவுக்கு பிறகு திமுக கருணாநிதியின் குடும்ப கட்சியாக ஆகிவிட்டது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், நான்கரை ஆண்டு காலம் அற்புத ஆட்சி நடத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியவர் பழனிசாமி. 2021-ல் சுமார் 1.5 சதவீதம் வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை இழந்தோம்.
பொய் வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்த திமுக கடந்த 3 ஆண்டுகளில் ஏதாவது திட்டம் தந்துள்ளதா? பத்திரிகை துறைக்கே பாதுகாப்பில்லாத சூழ்நிலை தமிழகத்தில் உள்ளது. காவல்துறை திமுகவின் அடிமையாக உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது வந்தாலும் மீண்டும் பழனிசாமி தலைமையில் ஆட்சியை அமைப்போம். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து தலைமை கழக பேச்சாளர்கள் குன்னூர் சிவா, சாட்டையடி சாரதா உள்ளிட்டோர் பேசினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT