Last Updated : 26 Jan, 2024 06:28 PM

4  

Published : 26 Jan 2024 06:28 PM
Last Updated : 26 Jan 2024 06:28 PM

''கொடியேற்ற ஆளுநர் வருகை தாமதமானதால் குழந்தைகளுக்கு பாதிப்பு'' - தேநீர் விருந்தை புறக்கணித்த புதுச்சேரி எம்எல்ஏ

புதுச்சேரி: உரிய நேரத்தில் தேசியக்கொடி ஏற்றாததால் குழந்தைகள் பாதிப்பை சுட்டிக்காட்டி ஆளுநர் தேநீர் விருந்தை முதல்வர் ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ நேரு புறக்கணித்தார்.

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை அளித்த தேநீர் விருந்தை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. அதேநேரத்தில் முதல்வர் ரங்கசாமி மற்றும் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜகவினர் பங்கேற்றனர். ஆனால் முதல்வர் ரங்கசாமி ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ நேரு, ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணித்திருந்தார். இதுபற்றி அவர் கூறியதாவது: ''மாநில அந்தஸ்து உரிமைக்காக புதுச்சேரி எதிர்பார்த்து கொண்டிருக்கும் இந்த வேளையில் குடியரசு தினத்தை கூட உரிய நேரத்தில் கொடியேற்றி கொண்டாட முடியாத அவலநிலை புதுச்சேரியில் நிலவுகிறது. மத்திய அரசு நம் புதுச்சேரிக்கு நிரந்தர ஆளுநரை நியமிக்காமல் மூன்று ஆண்டு காலமாக இரவல் ஆளுநரை வைத்து அரசை வழிநடத்துவது கண்டனத்துக்குரியது. இதனால் பல நிலைகளில் புதுச்சேரிக்கான அங்கீகாரம் மறுக்கப்படுகிறது. இரண்டு மாநிலங்களில் ஆளுநராக பணியாற்றுபவரால் புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மக்களுக்கான திட்டங்களில் கவனம் செலுத்த முடியாதவராக இருக்கிறார்.

குறிப்பாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் காலை 8.00 மணிக்கெல்லாம் குடியரசு தினக் கொண்டாட்டங்கள் தொடங்ககூடிய நிலையில் நம் புதுச்சேரி மக்கள் மட்டும் விழாவினை உரிய நேரத்தில் கொண்டாட முடியாமல் ஆளுநருக்காக காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இது குடியரசுதின மாண்பையும், மரபையும் அவமதிக்கும் செயலாக உள்ளது. உரிய நேரத்தில் தேசிய கொடியை ஏற்றமுடியாத காரணத்தால் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவ மாணவிகள் சிரமத்திற்கு உள்ளாவதுடன் அவர்களது பெற்றோர்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். குடியரசு தின கொண்டாட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அதில் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும். இதில் அவர்கள் கலந்து கொள்வதற்காக அதிகாலை 4.00 மணிக்கெல்லாம் உறக்கத்திலிருந்து எழுந்து கலை நிகழ்ச்சிகான அலங்காரம் மற்றும் உடைகளை அணிந்து உணவு அருந்த கூட நேரம் இல்லாமல் அவரவர் படிக்கும் பள்ளிகளுக்கு சென்று அங்கிருந்து விழா நடக்கும் இடங்களில் வந்து வரிசையில் இடம்பிடித்து அதிக நேரம் காத்திருக்கின்றனர்.

இந் நிலையில் ஆளுநர் வருகைக்காக மேலும் பல மணிநேரம் காத்திருந்து மதியம் 1 மணிவரை மாணவ மாணவிகள் கடும் வெயிலில் சிரமத்துடன் கலை நிகழ்ச்சிகள் ஈடுபட்டு சோர்வடைந்து மயக்கநிலைக்கு தள்ளபடுகிறார்கள். இவர்கள் மட்டுமல்லாது இவர்களை போல் மற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வோருக்கும் இதேநிலைமை ஏற்படுகிறது. அதேபோல இதற்காக பணியில் ஈடுபடும் காவல்துறையினர், அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் சிரமத்திற்குள்ளாகி இருக்கிறார்கள் என்பதை ஆளுநர் உணர வேண்டும். இதற்குமேலாவது குடியரசுதின மாண்பையும், மரபையும் காக்கும் விதமாக உரிய நேரத்தில் தேசிய கொடியை ஏற்ற சம்மந்தப்பட்டவர்கள் முடிவெடுக்கவேண்டும். இதன்மூலம் எனது கண்டனத்தை தெரிவித்து ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தினை புறக்கணிக்கிறேன்'' என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x