Published : 26 Jan 2024 05:07 PM
Last Updated : 26 Jan 2024 05:07 PM
சென்னை: "நேர்முகத் தேர்வை நடத்தும் குழுவில் எஸ்சி உறுப்பினர் ஒருவரும், சிறுபான்மை சமூகத்தவர் ஒருவரும் இடம்பெறுவது வழக்கம். ஆனால், தற்போது அவ்வாறு பட்டியல் சமூகத்தினர், சிறுபான்மையினர் இடம்பெறவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. வழக்கமான நடைமுறையைப் பின்பற்றி சிவில் நீதிபதிகளுக்கான இந்த நேர்முகத் தேர்விலும் தேர்வு நடத்துகிற நீதிபதிகளின் குழு பன்மைத்துவத்தோடு அமைக்கப்படுவது அவசியமாகும்" என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் கீழமை நீதிமன்றங்களில் பணியாற்றுவதற்காக நியமிக்கப்படும் சிவில் நீதிபதிகளை நேர்காணல் செய்யும் தேர்வுக்குழுவில் பட்டியல் சமூகத்தவர், சிறுபான்மையினர் உள்ளிட்டவர்களையும் இடம்பெறச் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழகத்தில் 245 சிவில் நீதிபதிகளுக்கான எழுத்துத் தேர்வுகள், த.நா.பொதுத் தேர்வாணையத்தின் மூலம் இரண்டு கட்டங்களாக கடந்த ஆண்டு நடைபெற்று, தற்போது இறுதியாக நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. ஜனவரி இறுதி வாரத்தில் தொடங்கி பிப்ரவரி முதல் வாரம் வரையிலும் நடக்கவிருக்கும் இந்த நேர்முகத் தேர்வை உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதிபதிகள் கொண்ட ஒரு குழு நடத்த உள்ளது. அவ்வாறு நேர்முகத் தேர்வு நடத்தும் நீதிபதிகளில் பட்டியலில் இனத்தைச் சேர்ந்தவரோ, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவரோ இடம் பெறவில்லை என அறிய வருகிறோம்.
இது பொதுவாக நேர்முகத் தேர்வுகளில் பின்பற்றப்படும் மரபுக்கும், பன்மைத்துவத்துக்கும் மாறாக உள்ளது என்பதை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவருகிறோம்.நேர்முகத் தேர்வை நடத்தும் குழுவில் எஸ்சி உறுப்பினர் ஒருவரும், சிறுபான்மை சமூகத்தவர் ஒருவரும் இடம்பெறுவது வழக்கம். ஆனால், தற்போது அவ்வாறு பட்டியல் சமூகத்தினர், சிறுபான்மையினர் இடம்பெறவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.
எனவே, வழக்கமான நடைமுறையைப் பின்பற்றி சிவில் நீதிபதிகளுக்கான இந்த நேர்முகத் தேர்விலும் தேர்வு நடத்துகிற நீதிபதிகளின் குழு பன்மைத்துவத்தோடு அமைக்கப்படுவது அவசியமாகும். சமூகநீதியையும்,பன்மைத்துவத்தையும் உறுதிப்படுத்த இது உதவியாக இருக்கும். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, எமது இந்த கோரிக்கையப் பரிசீலித்து நேர்முகத் தேர்வை நடத்தும் நீதிபதிகள் குழுவில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரையும், சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த ஒருவரையும் இடம்பெற ஆவன செய்ய வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம், என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT