Published : 26 Jan 2024 05:32 PM
Last Updated : 26 Jan 2024 05:32 PM
புதுச்சேரி: கர்நாடகத்தில் காவிரி குறுக்கே மேகேதாட்டு அணை கட்டுவதை தமிழக முதல்வர் நட்பு ரீதியாக சென்று தடுக்காவிட்டால் அவர்கள் நட்பு தப்புரீதியாகவுள்ளது என்றே அர்த்தம் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து மதியம் நடந்தது. ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக தரப்பில் பங்கேற்றனர். முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ ஜெயக்குமார் மற்றும் எம்எல்ஏக்கள், அதிமுகவினர் பங்கேற்றனர். இந்நிகழ்வை எதிர்க்கட்சிகளான திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் ஆகியோர் புறக்கணித்தனர். இந்நிகழ்வுக்கு பிறகு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''புதுச்சேரியில் பல நல்லத்திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் இணைந்து நிறைவேற்றி வருகிறார்கள். முதல் வாக்காளர்கள் 50 லட்சம் பேரிடம் பிரதமர் பேசியுள்ளார். வாக்களிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். புதுச்சேரி வேகமாக முன்னேறி வருகிறது. குடியரசு தினத்தையொட்டி இரண்டு மாநிலங்களில் தேசிய கொடியை ஏற்றியதை பெருமையாக நினைக்கிறேன். அங்கு புதிய ஆட்சி. முந்தைய முதல்வர் வரமாட்டார்.
இன்று முதல்வர், அமைச்சர்கள் வந்தனர். மாலை விருந்துக்கும் வருவதாக சொன்னார்கள். ஆளுநர் மாளிகை விருந்துக்கு அழைப்பு விடுத்தால் வரவேண்டும். தெலங்கானாவில் ஏற்கெனவே பலமுறை அழைத்தும் முந்தைய முதல்வர் வரவில்லை. இப்போது வரமுடியவில்லை. காங்கிரஸ் ஆட்சி தற்போது வந்துள்ளது. ஆனால், முதல்வர் அமைச்சரவையுடன் வந்து கலந்துகொள்வதாக குறிப்பிட்டு சென்றனர். கொள்கைகள்- கட்சிகள் மாறுபடலாம். ஆனால் அழைப்பு விடுத்தபோது அன்போடு பங்கேற்க வேண்டும். அதுவே நல்லது. அரசியல் அனைத்து இடத்திலும் புக ஆரம்பித்தால் நட்பு என்பது இல்லாமல் போய்விடும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாற்றுக் கொள்கை உடையவர்கள் நட்புடன் பழகி இருக்கிறார்கள். ஆனால் விருந்துக்கு வராததையே பெருமையாக கருதக்கூடாது. அவர்கள் வராததால் அதிர்ச்சி, கவலை எனக்கு இல்லை. சாப்பிட வந்தால் மகிழ்ச்சி. அன்பை, கருத்துகளை பகிர்ந்துகொள்ளலாம். விருந்துக்கு வரவில்லை என சொல்வதையே நாகரீகமாக சில கட்சிகள் கருதுகின்றன. இது தவிர்க்கப்படவேண்டும்.
ஜல்லிக்கட்டு மீட்டுக் கொடுத்து திமுக தான் என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் ஜல்லிக்கட்டுக்கு மிக முயற்சி செய்தவர் பாரத பிரதமர் மோடி. 3 மத்திய அமைச்சர்கள் ஒரே நாளில் கையெழுத்திட்டு, ஜல்லிக்கட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. மு.க. ஸ்டாலின் கூட்டணியில் இருந்த கட்சிகள் உச்ச நீதிமன்றத்திலேயே இதனை எதிர்த்து பேசினார்கள். ஜல்லிக்கட்டு மீட்டுக் கொடுத்ததில் பாஜகவுக்கு பங்கு இல்லை என்று கூறுவது தவறானது. தமிழகத்தில் ஆட்சியில் இருப்போரின் கூட்டணி ஆட்சிதான் கர்நாடகத்தில் உள்ளது. மேகேதாட்டு குறுக்கே அணை கட்டுவதற்கு தமிழக முதல்வர் நட்பு ரீதியாக சென்று தடுக்க வேண்டும்.. நட்பு ரீதியாக தடுக்கவில்லை என்றால் அவர்கள் நட்பு தப்பு ரீதியாக உள்ளது என்று ஏற்றுக்கொள்ள வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT