Published : 26 Jan 2024 04:29 PM
Last Updated : 26 Jan 2024 04:29 PM
உடுமலை: 11-ம் நூற்றாண்டில் வடமொழிக்கென தமிழர்கள் உருவாக்கிய கிரந்த எழுத்துகளுடன் கூடிய மந்திர வார்த்தைகள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே பரஞ்சேர்வழி கிராமத்தில் மகாதேவர் நட்டுராமந்தர் என்ற மத்திய புரீஸ்வரர் மற்றும் வீரநாராயணப் பெருமாள் கோயில் உள்ளது. அங்குள்ள அம்மன் சன்னதி முன்பு, பாதி மண்ணில் புதைந்த நிலையில் இருந்த பெரிய கல்வெட்டு மீட்கப்பட்டது.
இதுகுறித்து திருப்பூர் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த சு.ரவிக்குமார் என்பவர் கூறியதாவது: மத்திய புரீஸ்வரர் கோயிலின் அம்மன் சன்னதி அருகே பாதி மண்ணில் புதைந்திருந்த பெரிய கல்வெட்டைமீட்டு, ஆய்வு செய்தோம். அதில் வடமொழிக்கெனத் தமிழர்கள் உருவாக்கிய ‘கிரந்த எழுத்து’ பொறிக்கப்பட்டுள்ளது.
இது, தமிழர்களுக்கே சொந்தமானது ஆகும்.எழுத்து சுமார் 220 செ.மீ உயரமும், 50 செ.மீ அகலமும், 20 செ.மீ கணமும் கொண்ட பெரிய கல்லில் நான்குபக்கங்களிலும் குறியீடுகளும், கிரந்த எழுத்துகளும் பொறிக்கப்பட்டுள்ளன. முதல் பக்கத்தில் இரண்டு குத்துவிளக்குகள், சூலம், சங்கு மற்றும் சந்திரன் ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளன. எழுத்துகளின் உயரம் 60 செ.மீ.
இந்த கிரந்த எழுத்துகளை வாசித்த இந்திய வரலாற்று பேராசிரியர் ஒய்.சுப்பராயலு, நான்கு பக்கங்களிலும் ஹ்ர்ரிம், ஹஸ்த்தா, ஹஸ்ரா, ஷாம், லம் போன்ற மந்திர சொற்களே திரும்பத் திரும்ப வருகின்றன என தெரிவித்தார். பொதுவாக இவ்வகை மந்திரக் கல்லைப் போற்றி வழிபட்டால் மக்களுக்கும், கால்நடைகளுக்கும் ஏற்படும் நோயை குணப்படுத்தும் என்பது நம்பிக்கை. எழுத்து அமைப்பை வைத்து பார்க்கும்போது, இந்த கல்வெட்டு கி.பி.11-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.
அதே பகுதியில் உள்ள வீரநாராயண பெருமாள் கோயில் அருகே மண்ணில் புதைந்திருந்த கல்வெட்டை ஆய்வு செய்தபோது, அதில் மூன்று பக்கங்களிலும் தமிழ் எழுத்துகள் இருப்பதைக் காண முடிந்தது. 80 செ.மீ. உயரமும், 50 செ.மீ. அகலமும், 20 செ.மீ. கணமும் கொண்ட இந்த கல்வெட்டில், வரலாற்றுச் சிறப்புமிக்க செய்திகள் இருப்பதை அறிய முடிகிறது. இது, கி.பி. 16-ம் நூற்றாண்டு தமிழ் கல்வெட்டாக இருக்கலாம். இதுபோன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வெட்டுகளை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT