Published : 26 Jan 2024 10:32 AM
Last Updated : 26 Jan 2024 10:32 AM
சென்னை: குடியரசு தின விழாவில், தமிழக அரசின் மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது பத்திரிகையாளரும், ஆல்ட் நியூஸ் இணையதளத்தின் இணை நிறுவனருமான முஹம்மது ஜுபைருக்கு வழங்கப்பட்டது.
நாடு முழுவதும் 75-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்தில் இன்று காலை 8 மணிக்கு தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஏற்றி வைத்தார்.
இதைத் தொடர்ந்து, மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது, திருத்திய நெல் சாகுபடிக்கான விருதுகள், மதுவிலக்கு தொடர்பான காந்தியடிகள் பதக்கங்கள், சிறந்த காவல் நிலையத்துக்கான விருது உள்ளிட்ட விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இதில் மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவரும், ஆல்ட் நியூஸ் இணையதளத்தின் இணை நிறுவனருமான முஹம்மது ஜுபைருக்கு வழங்கப்பட்டது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக் கோட்டை வட்டம், தளி பஞ்சாயத்து, உருது பள்ளி தெரு என்ற முகவரியில் வசித்து வரும் முகமது ஜூபேர், த/பெ. முகமது ரபீக் என்பவர் மத நல்லிணக்கத்திற்காகப் பல்வேறு பணிகளை ஆற்றி வருகிறார்.
முகமது ஜூபேர் ஆல்ட் நியூஸ் என்ற பெயரில் இணையதளத்தைத் தொடங்கி, சமூக ஊடகங்களில் வெளிவரும் செய்திகளின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து உண்மையான செய்திகளை மட்டும் தனது இணையதளத்தில் வெளியிட்டு மக்களுக்கு தொடர்ந்து அளித்து வருகிறார். அவரது இந்த பணியானது பொய்யான செய்தியினால் சமூகத்தில் ஏற்படும் வன்முறைகளைத் தடுக்க உதவி வருகிறது.
கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவிய காணொளி காட்சிகளின் உண்மை தன்மையை சரிபார்த்து சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளிகளில் காட்சிகள் தமிழ்நாட்டில் நடைபெற்றது அல்ல என தனது ஆல்ட் நியூஸ் இணையதளம் மூலம் தெரியப்படுத்தினார்" எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த விருதை பெறுவது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முஹம்மது ஜுபைர், “தமிழ்நாடு அரசிடம் இருந்து மதநல்லிணக்க விருதைப் பெறுவதில் மகிழ்ச்சி. அரசாங்கத்திடம் இருந்து எனக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. குடியரசு தினத்தன்று அரசிடம் இருந்து இத்தகைய விருது கிடைப்பது நெகிழ்ச்சி அடையச் செய்கிறது. தமிழ்நாடு அரசுக்கு நன்றி” என்று தெரிவித்தார்.
மத நல்லிணக்கத்திற்காக சேவையாற்றி வருபவர்களுக்கு ஆண்டுதோறும் கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை பெறுபவர்களுக்கு ரூ.25,000-க்கான காசோலையும் சான்றிதழும் வழங்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT