Published : 25 Jan 2024 07:25 PM
Last Updated : 25 Jan 2024 07:25 PM

“ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம்!” - வீட்டின் முன்பு கல்வெட்டு வைத்த மதுரை இளைஞர் 

மதுரை: 'ஒட்டுக்குப் பணம் வாங்க மாட்டோம்' என்று மதுரை செல்லூரில் இளைஞர் ஒருவர் தனது வீட்டின் முன்பு கல்வெட்டு வைத்து திறந்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது.

மதுரை செல்லூரை சேர்ந்தவர் சங்கரபாண்டியன். சமூக ஆர்வலரான இவர், சமூக விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள். மின்வாரியம், கல்வித்துறை, சுகாதாரம் போன்ற பல்வேறு துறைகளில் குறைபாடுகளை போக்கி மக்கள் பலன்பெற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனு அளித்து தீர்வு காணும் பணிகளை செய்து வருகிறார். தற்போது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தனது வீட்டின் முன் 'ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம்' என்று கல்வெட்டு ஒன்றை வைத்துள்ளார்.

சங்கரபாண்டியன் கூறுகையில், ''நான் ஒருபோதும் ஓட்டுபோட அரசியல் கட்சிகளிடம் பணம் பெற மாட்டேன். என்னை போல், ஏராளமான மக்கள் பணம் பெறாமல் வாக்களிக்கிறார்கள். ஆனால், பெரும்பான்மை மக்கள், வாக்களிக்க பணம் பெறுகிறார்கள். அதனாலே, மக்கள் அவர்களிடம் தங்கள் அடிப்படை வசதிகளை கேட்டு பெற முடியவில்லை.

தேர்தலில் செலவு செய்த பணத்தை எடுக்க பார்க்கிறார்கள். எங்கள் குடியிருப்புப் பகுதிகளில் சாலை வசதி மோசமாக உள்ளது. பாதாளச் சாக்கடை பழுதடைந்து தொற்று நோய் பரவுகிறது. குடிநீரும் சரியாக வருவதில்லை. குடிநீரில் சாக்கடை நீர் கலக்கிறது. ஆனால், சாக்கடை வரி, குடிநீர் வரியை மாநகராட்சி வசூல் செய்கிறது. கொடுக்க தாமதம் செய்தால் நோட்டீஸ் விடுகிறார்கள்.

அப்படியென்றால் அடிப்படை வசதி செய்து தராத மாநகராட்சிக்கு மக்கள் நோட்டீஸ் விட வேண்டும். அரசு அலுவலங்களில் இங்கு லஞ்சம் பெறுவதில்லை என்று எழுதிப்போடுவார்கள். ஆனால், லஞ்சம் இல்லாமல் எந்த அரசு அலுவலகங்களிலும் பொதுமக்கள் தங்கள் அடிப்படை உரிமைகளை பெற முடியவில்லை.

அதனாலே, வெறும் வார்த்தைகளால் மட்டுமே வாக்களிக்க பணம்பெறமாட்டேன் என்று கூறினால் போதாது என்று என் வீட்டின் முன் கல்வெட்டு வைத்து திறந்துள்ளேன். அதில், ஓட்டுக்கு பணம் வாங்குவதும், கொடுப்பதம் சட்டபடி குற்றம். நமது வாக்கு விற்பனைக்கு இல்லை. மது நாட்டிற்கு வீட்டிற்கும் கேடு, நேர்மையான வேட்பாளருக்கு வாக்களிப்போம் போன்ற வாசகங்களை அதில் பொறித்துள்ளேன். இதுபோல், ஒவ்வொரு குடிமகனும் தன்னுடைய வீட்டின் இதுபோன்ற வாசகங்களை எழுதிப்போட வேண்டும்,'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x