Published : 25 Jan 2024 05:57 PM
Last Updated : 25 Jan 2024 05:57 PM
சென்னை: “செய்தியாளர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை தமிழக அரசு கைது செய்து உரிய தண்டனை வழங்கிட வேண்டும்” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''திருப்பூர் மாவட்டம் - பல்லடம் வட்டத்தைச் சார்ந்த நேச பிரபு என்பவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தியாளராக பல ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். நேற்று இரவு அவர் மீது மர்ம நபர்கள் கொலை வெறித் தாக்குதல் நடத்தி, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
பரபரப்பான சூழ்நிலையில், கொலை வெறித் தாக்குதல் நடத்தியவர்களை கண்டறிந்து தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுகலம் முன்பு செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
தமிழக அரசும் விரைந்து செயல்பட்டு இரண்டு பேரைக் கைது செய்து விசாரித்து வருகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட நேச பிரபுவுக்கு மூன்று லட்ச ரூபாய் நிதி உதவி அளிப்பதாக அறிவித்திருக்கிறார். தமிழக அரசு தொடர்ந்து முனைப்புடன் செயல்பட்டு, குற்றவாளிகளைக் கண்டறிந்து உரிய தண்டனை வழங்குமாறும், செய்தியாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்” என்று வைகோ கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT