Published : 25 Jan 2024 11:38 AM
Last Updated : 25 Jan 2024 11:38 AM

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் இலக்கியமாமணி விருது - விருதாளர்களின் பெயர்கள் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் இலக்கிய மாமணி விருதாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பன்னூறு ஆண்டுகளாக வற்றாத படைப்புகளைக் கொண்டு, சீரிளமையோடு இலங்கி வரும் தமிழுக்கும், தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தொண்டாற்றிடும் தமிழ்த்தாயின் அறிஞர் பெருமக்களுக்குத் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாக பல்வேறு விருதுகளையும் சிறப்புகளையும் வழங்கி, அவர்தம் புலமைக்கும் தொண்டுக்கும் பெருமை சேர்த்து வருகின்றது. அவ்வகையில் மரபுத்தமிழ், ஆய்வுத்தமிழ், படைப்புத் தமிழ் ஆகிய வகைப்பாட்டில் மூன்று அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் உயரிய விருதான இலக்கியமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது. இலக்கியமாமணி விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் ஐந்து இலட்சத்திற்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை அளித்தும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பு செய்யப்பெறுவார்கள்.

இலக்கியமாமணி விருது 2022ஆம் ஆண்டிற்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் அரங்க. இராமலிங்கம்-வயது 68 (மரபுத்தமிழ்), விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு.கொ.மா.கோதண்டம் - வயது 83 (ஆய்வுத்தமிழ்), கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் சூர்யகாந்தன் (மா.மருதாச்சலம்) - வயது 67 (படைப்புத்தமிழ்) ஆகியோர் தெரிவு செய்யப்பெற்றுள்ளனர்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நேர்வாக நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி மணி அர்ஜீணன் -வயது 70 (மரபுத்தமிழ்), திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. அர. திருவிடம்-வயது 77 (ஆய்வுத்தமிழ்), சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த திரு. க. பூரணச்சந்திரன்-வயது 74 (படைப்புத்தமிழ்) ஆகியோர் தெரிவு செய்யப்பெற்றுள்ளனர்.

2023ஆம் ஆண்டிற்கு இலக்கியமாமணி விருதிற்கு கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. ஞா. மாணிக்கவாசகன்- வயது 94 (மரபுத்தமிழ்), திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பேராசிரியர் சு. சண்முகசுந்தரம் - வயது 73 (ஆய்வுத்தமிழ்), சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர் இலக்கியா நடராசன் (எ) திரு. ச. நடராசன் –வயது 64 (படைப்புத்தமிழ்) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x