Published : 25 Jan 2024 05:26 AM
Last Updated : 25 Jan 2024 05:26 AM
சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்ததையடுத்து, கடந்தாண்டு ஜனவரி 9-ம் தேதி தொடங்கிய, தமிழக சட்டப்பேரவையின் 5-வது கூட்டத் தொடர் முடித்து வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பிப்ரவரியில் தொடங்கும் சட்டப்பேரவையின் 6-வது கூட்டத்தொடரில் ஆளுநர் பங்கேற்று உரையாற்ற வாய்ப்புள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபாக உள்ளது. இந்நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 9-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் ஆண்டு முதல் கூட்டம் அதாவது, இந்த 16-வது சட்டப்பேரவையின் 5-வது கூட்டத் தொடர் தொடங்கியது.
ஏற்கெனவே, பல்வேறு விவகாரங்களில் ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் இடையில் கருத்து மோதல்கள் இருந்து வந்தன. இந்த சூழலில், ஆளுநர் அன்று தனது உரையை வாசிக்கும்போது, தமிழக அரசு தயாரித்து அளித்து ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட அந்த உரையில் சிலவற்றை நீக்கியும், சிலவற்றை சேர்த்தும் வாசித்தார்.
இதையடுத்து, சட்டப்பேரவையில் ஆளுநர் இருக்கும்போதே, அவருக்கு எதிரான தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். இதையறிந்த ஆளுநரும் பேரவையில் இருந்து வெளியேறினார். அதன்பின், அரசு அளித்த ஆளுநர் உரையே பேரவை குறிப்பில் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, பல்வேறு விவகாரங்களில் ஆளுநர் - அரசு இடையிலான மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.
இந்த சூழலில் இந்தாண்டு சட்டப்பேரவையின் முதல் கூட்டம் வரும் பிப்ரவரி மாதத்தில் நடத்தப்பட உள்ளது. ஏற்கெனவே, சட்டப்பேரவையில் கடந்தாண்டு ஆளுநர் உரையுடன் தொடங்கிய 5-வது கூட்டத் தொடர் ஆளுநரால் முடித்து வைக்கப்படவில்லை. எனவே, ஆளுநரை அழைக்காமலேயே கூட்டத் தொடரை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது.
இருப்பினும், சட்டப்பேரவையின் 5-வது கூட்டத் தொடரை முடித்து வைப்பதற்கு அனுமதி கோரும் கோப்பினை தமிழக சட்டப்பேரவை செயலகம் ஆளுநருக்கு அனுப்பியது. ஆளுநரும் நேற்று கூட்டத்தொடரை முடித்து வைக்க அனுமதியளித்துள்ளார்.
இதையடுத்து, ‘கடந்தாண்டு ஜன.9-ம் தேதி தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடரை, ஆளுநர் முடித்து வைத்துள்ளார்’ என சட்டப்பேரவை செயலர் கே.சீனிவாசன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை தொடர்ந்து, அடுத்த மாதம் தொடங்கும் அடுத்த கூட்டத்தொடரின் முதல் நாளில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
சட்டப்பேரவையின் கடந்த 5-வது கூட்டத்தொடரை பொறுத்தவரை, கடந்தாண்டு ஜனவரி 9-ம் தேதி தொடங்கி 4 நாட்கள் அதாவது 13-ம் தேதி வரையும், 2-வது மற்றும் பட்ஜெட் கூட்டம் மார்ச் 20-ம் தேதி தொடங்கி ஏப்.21ம் தேதி வரை 21 அலுவல் நாட்களும், 3-வது மற்றும் மழைக்கால கூட்டம் அக்.9 தொடங்கி 11 வரை 3 நாட்களும், ஆளுநர் திருப்பியனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக நவ.18-ம் தேதி ஒரு நாளும் என 29 நாட்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT