Published : 25 Jan 2024 04:36 AM
Last Updated : 25 Jan 2024 04:36 AM
குடியரசு தின விழாவை முன்னிட்டு, சென்னையில் பாதுகாப்பு பணியில் 7,500 போலீஸார் ஈடுபட்டுள்ளனர். விழா நடைபெறும் மெரினா கடற்கரை சாலையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் குடியரசு தின விழா நாளை (26-ம் தேதி) கொண்டாடப்பட உள்ளது. சென்னை மெரினாவில் உழைப்பாளர் சிலை அருகே நடைபெறும் விழாவில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றிவைத்து மரியாதை செலுத்துகிறார். முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகள், சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்கின்றனர்.
இதையொட்டி, அப்பகுதியில் 1973-ம் ஆண்டு குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவு 144-ன்கீழ் இன்றும், நாளையும் (ஜனவரி 25, 26) ட்ரோன்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோ-லைட் ஏர்கிராஃப்ட், பாரா கிளைடர்ஸ், பாரா மோட்டார்ஸ், ஹேண்ட் கிளைடர்ஸ், ஹாட் ஏர் பலூன்கள் போன்றவை பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் எச்சரித்துள்ளார்.
ஆளுநர் மாளிகை மற்றும் முதல்வர் இல்லத்தில் இருந்து மெரினா செல்லும் வழித்தடங்கள், விழா நடைபெறும் பகுதி ஆகியவை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மெரினா காமராஜர் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரின் நேரடி மேற்பார்வையில் கூடுதல் காவல் ஆணையர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா (தெற்கு), அஸ்ரா கார்க் (வடக்கு), சுதாகர் (போக்குவரத்து) ஆகியோர் தலைமையில் 7,500 போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட சென்னை விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள், வழிபாட்டு தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விடுதிகள், ஓட்டல்களில் சோதனை நடத்தப்பட்டு, சந்தேக நபர்களின் நடமாட்டம் இருந்தால் காவல் துறைக்கு தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர் முழுவதும் அந்தந்த காவல் சரக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, நகரின் முக்கிய நுழைவுப் பகுதிகளான மாதவரம், திருவொற்றியூர், மதுரவாயல், மீனம்பாக்கம், துரைப்பாக்கம், நீலாங்கரை ஆகிய இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து காவல் துறையினர் மூலம் வாகன தணிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடலோரப் பகுதிகளும் போலீஸாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment