Published : 25 Jan 2024 04:15 AM
Last Updated : 25 Jan 2024 04:15 AM

கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்கும் விவகாரம்: அரசு உத்தரவை ஏற்க உரிமையாளர்கள் மறுப்பு - கோயம்பேட்டில் போலீஸ் குவிப்பு

ஆம்னி பேருந்து விவகாரம் காரணமாக சென்னை கோயம்பேட்டில் குவிக்கப்பட்ட போலீஸார் படம்: எக்ஸ்

சென்னை: கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க மறுத்து சிஎம்டிஏ, காவல் துறை அதிகாரிகளுடன் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவியது.

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்துதான் ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என்று தமிழக அரசும், அவ்வாறு இயக்க அவகாசம் தர வேண்டும் என்று உரிமையாளர்கள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே, ஜன.24-ம் தேதி (நேற்று) முதல் ஆம்னி பேருந்துகள் சென்னை நகருக்குள் பயணிகளை ஏற்றி இறக்க கூடாது என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், சிஎம்டிஏ அமைச்சர் சேகர்பாபு, போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டனர். மீறுவோர் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதனால், நேற்று பிற்பகல் முதலே கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பதற்றமான சூழல் நிலவியது. ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். இரவு 7 மணிக்கு மேல் தென்மாவட்டங்களுக்கு புறப்பட்டு செல்லும் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து பயணிகளுடன் இயங்க கூடாது என்று போலீஸார் தொடர்ந்துஅறிவுறுத்தியபடி இருந்தனர்.

இதனால் காவல் துறை அதிகாரிகளுடன் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அ.அன்பழகன், தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க துணை தலைவர் சலீம் ஆகியோர் கூறியதாவது:

ஆம்னி பேருந்துகளை ஜன.24 முதல் கோயம்பேட்டில் இருந்து இயக்ககூடாது என 2 நாட்களுக்கு முன்புதான் சுற்றறிக்கை வந்தது. 90 நாட்களுக்கு முன்பிருந்தே முன்பதிவு நடக்கிறது. 24-ம் தேதி பயணிக்க 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த தொடர் விடுமுறையையொட்டி 2 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இவர்கள் அனைவரையும் கிளாம்பாக்கம் வரச் சொல்வது சாத்தியம் இல்லை.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 50 கடைகள், 400 பேருந்துகள் நிறுத்துவதற்கான இடம் உள்ளது. கிளாம்பாக்கத்தில் ஒரு அலுவலகம் கூட ஒதுக்கப்படவில்லை. அங்கு எப்படி பேருந்துகளை இயக்க முடியும்.அங்கு நீர் தேங்கும் அபாயமும் உள்ளது. சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பேருந்துகளை அங்கு நிறுத்த சொல்வது நியாயமா. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அலுவலகம் போன்றவற்றை ஏற்பாடு செய்து தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கிடையே, ஆம்னி பேருந்துகளில் பயணிக்க முன்பதிவு செய்தவர்கள் நேற்று பிற்பகல் முதலே கோயம்பேடு வரத் தொடங்கினர். இந்நிலையில், 300-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு, ஆம்னி பேருந்து நிலையத்தின் நுழைவு வாயில் பகுதி, தடுப்புகளால் அடைக்கப்பட்டு, போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இரவு 7 மணிக்கு மேல் பயணிகளும், பேருந்துகளும் நிலையத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. அதன்பிறகு, வந்த பயணிகளை கிளாம்பாக்கம் செல்லுமாறு காவல்துறை அதிகாரிகளும், பேருந்து ஊழியர்களும் கூறினர். ஒருசில பேருந்துகள் கிளாம்பாக்கத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

இதனால் கோபமடைந்த பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுபோன்ற பிரச்சினை நிலவுவதாக பேருந்து நிர்வாகங்கள் தரப்பில் தகவல்கூட தெரிவிக்கப்படவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டினர். பயணிகள் அனைவரையும் கிளாம்பாக்கம் செல்லுமாறு சிஎம்டிஏ அதிகாரிகள் அறிவுறுத்தினர். அவர்களை அழைத்துச் செல்லும் விதமாக கிளாம்பாக்கத்துக்கு மாநகர பேருந்துகள் கட்டணமின்றி இயக்கப்பட்டன. பேருந்துகள் எங்கிருந்து புறப்படும் என்ற குழப்பத்தால், ஒருசில பயணிகள் மட்டுமே அந்த பேருந்துகளில் ஏறி சென்றனர். இங்கும் அங்குமாக அலைக்கழிக்கப்பட்டதால் குழந்தைகளுடன் வந்தவர்கள், முதியவர்கள், பெண்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.

கிழக்கு கடற்கரை சாலை, வேலூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் மட்டும் நீண்ட சோதனைக்கு பிறகு கோயம்பேட்டில் இருந்து பயணிகளோடு வெளியே வர அனுமதிக்கப்பட்டன. நீண்ட நேரம் சோதனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓட்டுநரை சிஎம்டிஏ அதிகாரிகள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், ஓட்டுநர்கள் அனைவரும் பேருந்து நிலையத்துக்கு வெளியே வந்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் காணப்பட்டது. இன்று முதல் தென்மாவட்டங்களில் இருந்து பயணிகளுடன் கோயம்பேட்டுக்கு வரும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x